கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (01) மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையேற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதன் மூலம் மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான கருத்துக்களை ஊடகவியலாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதும் மக்களின் பிரச்சினைகளை இனங்காணல், புதிய பொருளாதார ரீதியான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தல், அதற்கான விழிப்பூட்டல்களை மக்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகப் பொறுப்பதிகாரி வி.ஜீவானந்தன் மற்றும் சிரேஷ்ட, இளம் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.