சென்னை:
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து அம்சங்களும் இருந்தபோதிலும், 3 பாயிண்ட்டுகள்தான் அவர்களை சிக்க வைத்திருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் (21), கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீஸார் நடத்தியட விசாரணையில், தன்னுடன் படிக்கும் மாணவி சுவாதியுடன் கோகுல்ராஜ் பேசியதும், இதை பார்த்த சிலர் அவரை கடத்திச் சென்று கொலை செய்ததும் தெரியவந்தது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான கோகுல் ராஜ், தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தான் இந்த கொலையை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்படடது.
தண்டனை – மேல்முறையீடு:
இந்த வழக்கை விசாரித்த மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு 5-ம் தேதி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும் (42 ஆண்டுகள்), மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஒரே சாட்சியும் மாறியது:
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட கோகுல்ராஜின் தோழியான சுவாதி, கடைசி நேரத்தில் பிறழ் சாட்சியாக மாறி குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தார். இது, குற்றவாளிகளுக்கு மிகவும் சாதகமாக மாறியது. இதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்றே பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதற்கு முற்றிலுமாக மாறாக, சென்னை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை இன்று உறுதி செய்தது.
3 பாயிண்ட்டுகள்:
குற்றவாளிகளுக்கு அனைத்து அம்சங்களும் சாதகமாக இருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு மூன்றே மூன்று விஷயங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் கூறுகையில், “கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது போன்ற பல ஆவணங்களை குற்றவாளிகள் தரப்பு உருவாக்கியது. சுவாதியும் பிறழ் சாட்சியம் அளித்துவிட்டதால் இந்த வழக்கு முடிந்துவிட்டதாகவே கருதினோம். அப்போது கோகுல்ராஜின் உடற்கூராய்வு செய்ய மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும் என ஒரு வழக்கறிஞர் கேட்டதுதான் இதில் திருப்புமுனையாக மாறியது.
சிசிடிவி கேமரா:
அந்த மருத்துவ நிபுணர் அளித்த உடற்கூராய்வு அறிக்கையில், கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டது நிரூபணமானது. இதுதான் இந்த வழக்கின் முதல் வெற்றி. அதன் பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகள் வந்து சென்றது பதிவாகி இருந்தது. சாட்சி பொய் சொல்லும். சாட்சியம் பொய் சொல்லாது. எனவே இது இரண்டாவது முக்கிய ஆதாரமாக மாறியது.
பேட்டியில் உளறல்:
அதேபோல, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற யுவராஜ், கோகுல்ராஜின் செல்போனை பிடுங்கியதை தற்செயலாக ஒப்புக்கொண்டார். இதுதான் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த 3 விஷயங்கள்தான் இன்றைக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழிவகை செய்திருக்கிறது. இவ்வாறு வழக்கறிஞர் மோகன் கூறினார்.