புவனேஸ்வர்:
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எப்படி விபத்துக்குள்ளானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கோரமண்டல் ரயில் இன்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை வந்தடைய 25 மணிநேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் ஒடிசாவின் பாலாசோர் ரயில் நிலையத்துக்கு இந்த கோரமண்டல் ரயில் வந்துள்ளது.
அந்த ரயில் நிலையத்தில் சில பயணிகள் இறங்கியுள்ளனர். சிலர் ஏறியுள்ளனர். பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென அந்த ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு அதற்கு அடுத்தாக இருக்கும் தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளன. அந்த நேரம் பார்த்து, யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற சரக்கு ரயில் அந்த பெட்டிகள் பயங்கர வேகத்தில் மோதியுள்ளன. இப்படித்தான் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது.
பொதுவாக, கோரமண்டல் ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான் பயணிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் சென்னைக்கு இந்த கோரமண்டல் ரயிலில்தான் செல்வது வழக்கம். எனவே, தற்போது அதிக அளவிலான தமிழர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, ரயில் பெட்டிகள் கடுமையாக நசுங்கி இருப்பதால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரயிலில் வந்தவர்களின் உறவினர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று அவர்களின் நிலைமையை குறித்து கேட்டறிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.