புவனேஸ்வர்:
சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல்கட்டமாக 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் இரவு 7 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதியது. இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று பயங்கர சத்தத்துடன் மோதின. இதில் இரண்டு ரயில்களுமே தடம்புரண்டு நிலைக்குலைந்தது.
வனப்பகுதியில் விபத்து நிகழ்ந்ததால் ஒரு மணிநேரத்துக்கு பிறகே இச்சம்பவம் குறித்து வெளியுலகுக்கு தெரியவந்தது. தகவல் அறிந்ததும் அங்கு தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்டமாக 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 150 பேர் பலத்த காயத்துடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சென்னைக்கு வந்த ரயில் என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சிக்கியிருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தற்போது ஒடிசா விரைந்துள்ளார்.
இந்த சூழலில், விபத்து குறித்த விவரங்களை அறிய தொலைப்பேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 044 – 2533 0952, 044 – 2533 0953, 044 – 2535 4771 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு இதுதொடர்பான விவரங்களை அறியலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.