சென்னை: “தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை, யுவராஜ் மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கிறது” என்று கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறியுள்ளார்.
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வளாகத்தில் கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறியது:
“இந்த வழக்கில் வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த மனுவில், உடற்கூராய்வில் மூன்றாவது நபராக மருத்துவ நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில், ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான சம்பத்குமார் தாக்கல் செய்த உடற்கூராய்வு அறிக்கைதான் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு வேறு செல்போன்களையும், வாகனங்களையும் பயன்படுத்தினர். இந்த பத்து பேரும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தனர். அந்த சிசிடிவி பதிவுகள் தடயவியல் துறைக்கு அனுப்பி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தானாக கலந்துகொண்டு பேட்டி கொடுத்த யுவராஜ், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர் கோயிலுக்குச் சென்றதையும், அங்கு கோகுல்ராஜ் மற்றும் சுவாதியையும் சந்தித்ததையும், அவர்களின் செல்போனை பறித்துக்கொண்டதையும் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
எங்களது மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும்கூட, இந்த வழக்கில் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள்ள, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கக்கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஓர் அற்புதமான தீர்ப்பை அளித்திருக்கிறது” என்று அவர் கூறினார். | வாசிக்க > Gokulraj Murder Case | யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்