சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு செய்தது. அதில் டெலிவிஷன் தொடர் பாணியில் ஒரு விளையாட்டு அரங்கை தயார் செய்து ஊழியர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது. அதில் பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே கட்டி தொங்கவிடப்பட்டது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
இதில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம் (வயது 42) என்பவர் ராட்சத பலூனை கைப்பற்றி வெற்றி பெற்றார். தமிழரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெற்றி பெற்ற ஆறுமுகத்திற்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கைக்கெடிகாரம் உள்பட பல பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது நினைவுகூரத்தக்கது.