சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் மற்றும் நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உட்பட நாம் தமிழர் கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று, சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீமான் மற்றும் திருமுருகன் காந்தியின் ஆதரவாளர்கள், ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சீமான் கூறுகையில், ‘டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டதால் என்னுடன் தொடர்புடைய 20 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி. ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், ‘நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டும் என சென்னை காவல்துறை சார்பில் மத்திய அரசுக்கு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனவே இவ்விவகாரத்தில் சென்னை காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகள் பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீண்டும் ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கிய சீமான், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது புதிய ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிப்பது தவறானது’ என தெரிவித்துள்ளார்.