கொல்கத்தா : கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாக பஜார் ரயில் நிலையம் அருகே வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரமண்டல் விரைவு ரயில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில் மாலை 3.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கி மாலை 6.30 மணிக்கு பாலசோர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடைவதாக இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று மாலை இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 7.20 மணியளவில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது ஏறியது. இதனால், ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை (ODRAF) படைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் தடம்புரண்ட விபத்து தொடர்பான தகவல் மற்றும் உதவிக்கு, சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம், 6782262286 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை வெளியிட்டுள்ளது.