சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், கால்வாய் கரை ஓரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் லாக் நகர் முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரை உள்ள பக்கிங்காம் கால்வாய் கரை ஓரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று பகுதியில் வசிக்கும் மக்களிடம் கை ரேகை, கண் விழி உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அதிகாரிகள் வருகை தந்தனர்.
அப்போது தங்களுக்கு வேறு எந்த இடத்தில் மாற்று இடம் ஒதுக்க உள்ளீர்கள் என்று அதிகாரிகளை கேள்வி எழுப்பி, தகவல்களை சேகரிக்க விடாமல் மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாற்றிடம் குறித்து அதிகாரிகளும் எந்த உறுதியும் தெரிவிக்காததால், தங்களது விவரங்களை சேகரிக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் தற்போது இருக்கும் இந்த பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டருக்குள் மாற்று இடம் கொடுத்தால் நல்லது. ஆனால் எங்களால் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மாற்று இடம் கொடுத்தால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம்.
எங்களுக்கு மாற்று இடம் குறித்த ஒரு உறுதியான தகவலை தராமல், அதிகாரிகள் எங்களிடம் பயோமெட்ரிக் உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றனர். நாங்கள் அதனை தர மறுத்து உள்ளோம். மீண்டும் மீண்டும் எங்களை வெளியேற்ற அழுத்தம் மட்டுமே தருகிறார்கள். நாங்கள் கேட்கும் மாற்று இடத்தை அரசு அதிகாரிகள் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.