புதுடெல்லி: டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கான சட்ட மசோதா அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜகவின் தனி மெஜாரிட்டி காரணமாக மக்களவையில் இந்த மசோதா எளிதில் நிறைவேறும். ஆனால் மாநிலங்களவையில் சிக்கல் எழும் நிலை உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கேஜ்ரிவால் இதுவரை சந்தித்த, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி பிரசாத் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவளித்து விட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேஜ்ரிவால் நேற்று சந்தித்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரனை இன்று சந்திக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்திக்கவும் அவர் நேரம் கேட்டுள்ளார். எனவே, மத்திய அரசின் அவசர சட்டம் மீதான எதிர்ப்பு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க அடித்தளம் இடுவதாகக் கருதப்படுகிறது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பதால், இறுதி முடிவு எடுக்கும் நிலை அக்கட்சியிடம் உள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில், இரு மாநிலத் தலைவர்களும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு, காங்கிரஸ் மீது விழுந்துள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸிடம் இருந்து ஆம் ஆத்மி ஆட்சியை பறித்தது. குஜராத், கோவா சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
அவசர சட்டம் தொடர்பான இறுதி முடிவை காங்கிரஸ் வரும் ஜுன் 12-ம் தேதிக்கு முன் எடுக்கவேண்டியுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சிம்லாவில் ஒரு கூட்டம் நடத்தி ஆலோசிக்கவும் திட்டமிடுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்க பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாட்னாவில் ஜூன் 12-ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார். அதற்கு முன்பாக காங்கிரஸ் எடுக்கும் முடிவால், மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படுமா, இல்லையா என்பது தெரியவரும்.