திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸின் பிடியிலிருந்து நழுவி தப்பியோடிய போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அவரை துப்பாக்கி முனையில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பரபரப்பான பல்லடம் பேருந்து நிலையத்திற்கு, சீருடையில் இருந்த 4 போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு 3 பேரை அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென போலீஸ் பிடியிலிருந்து நழுவி தப்பியோடினான்.
மற்ற 2 கைதிகளையும் காவலர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பி ஓடியவனை 3 போலீஸார் துரத்திச் சென்றனர். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் ஒருவரை துரத்தி வருவதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாலையில் வந்த சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவரும் இதை பார்த்து விட்டு வாகனத்தை பிரேக் அடித்து நிறுத்த, அதில் வந்து மோதி கீழே விழுந்தான் அந்த நபர்.
கீழே விழுந்த நபரை துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களின் உதவியோடு மீட்டு மீண்டும் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்தனர் போலீஸார்.
இதுகுறித்து, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தப்பியோடியவர் தாராபுரத்தைச் சேர்ந்த 30 வயதான சுப்பிரமணி என்பதும், 2019 ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விட்டு மீண்டும் கோவைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சுப்பிரமணி தப்பியோடியது தெரிய வந்தது.
கைதிகள் தப்பியோடினால் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில், 3 கைதிகளை அழைத்துச் செல்ல வாகன வசதி செய்துக் கொடுக்காமல் பேருந்தில் அனுப்பி வைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.