தமிழ்நாடு அரசியலில் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு தருணங்களில் கலைஞர் கருணாநிதி மட்டும் இருந்திருந்தால்… என்ற வாக்கியத்தை அடிக்கடிக் கேட்டிருப்போம். அனைத்துக் காலகட்டத்திலும் கருணாநிதியின் அரசியல் ராஜதந்திரங்களும், அவரின் உழைப்பும், அவரின் நகைச்சுவையும், அவரின் அணுகுமுறைக்கான தேவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. சமகால அரசியலில் கருணாநிதி இருந்திருந்தால், பல்வேறு காட்சிகள் வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதற்கு அவரின் முந்தைய செயல்பாடுகளே சாட்சி.
`கலகல’ சட்டமன்றம்
கருணாநிதியின் நகைச்சுவை கலந்த பேச்சுக்குப் பல ரசிகர்கள் உண்டு. கலைஞர் இருந்திருந்தால் இன்றைய சட்டமன்றத்தில் பல நக்கல், நையாண்டிகள் சட்டமன்றத்தை வலம் வந்திருக்கும். எதிர்க்கட்சிகள் கோபத்துடன் கேள்வி எழுப்பினால் தனது பதிலால் கோபத்துடன் கேள்வி கேட்டவரையும் சிரிக்கவைத்துவிடுவார் கருணாநிதி. 1969-ல் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விநாயகம், “மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் `லவ்வர்ஸ் பார்க்’கில் மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் மட்டும் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்துமா?” என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி, “இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளும்” எனச் சொன்னார்.
இன்று கருணாநிதி இருந்திருந்தால், இதுபோல் பல `தக் லைஃப்’ சம்பவங்களைப் பார்த்திருக்கலாம்!
புதிய சட்டமன்றம்
தி.மு.க ஆட்சியில் அண்ணாசாலையில் பிரமாண்ட கட்டடத்தைக் கட்டி முடித்தும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதை மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. கலைஞர் கருணாநிதி மட்டும் இருந்திருந்தால், நிச்சயமாக நவீன அம்சங்களுடன் புதிய சட்டமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார்.
கிங் மேக்கர்
இன்று ஸ்டாலின் திமுக-வின் தலைவராக இருக்கிறார். இன்றைய ஸ்டாலினின் உயரத்திரத்துக்கு அஸ்திவாரமிட்டவர் கருணாநிதி. தி.மு.க-வைக் கடுமையாகச் சாடிவரும் பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலைகூட மு.க ஸ்டாலினை நாங்கள் வாரிசு அரசியல் விமர்சனத்துக்குள் எடுத்துவர மாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறார், வாரிசு என்ற விமர்சன வட்டத்துக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலினைக் களப்பணியில் ஈடுபடுத்தினார்.
அவரின் உழைப்புக்கேற்ப படிப்படியாக பதவி வழங்கினார் கருணாநிதி, ஸ்டாலின் மட்டுமன்றி இன்றைய சீனியர் அமைச்சர்களின் தற்போதைய ஆளுமைக்கு ஒரு காரணமும் கருணாநிதிதான்.
தேசிய அரசியல்
`நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக‘ என 1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்திக்கு ஆதரவு காட்டிய கருணாநிதி, 2004-ல் அவரின் மருமகள் சோனியா காந்திக்குச் சொன்ன பொன்மொழிதான் ”இந்திராவின் மருமகளே வருக… இந்தியாவின் திருமகளே வெல்க!’ இதைப்போலவே பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளவைக்க முடியாமல் திணறும் சூழலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சூழலை உருவாக்கி அதற்கென ஒரு தலைவரையும் அறிவித்துத் தலைமையேற்க வைத்திருப்பார் கலைஞர் கருணாநிதி.
கொள்ளை உறுதி
சித்தாந்தரீதியாக வலிமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்வதில் அச்சமற்றவர் கலைஞர் கருணாநிதி. தற்போது நாடாளுமன்றத்தில் மடாதிபதிகளை அழைத்து, செங்கோல் வழங்கச் செய்ததைக் கலைஞர் இருந்திருந்தால் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டமே நடத்தியிருப்பார். மாநில சுயாட்சியின் மீது ஏவப்படும் எந்தவொரு சதித்திட்டத்தையும் கூர்மையாக எதிர்த்திருப்பார், மூடநம்பிக்கை கொண்ட எந்த ஒரு செயலையும் விமர்சிக்கத் தவறியிருக்க மாட்டார்.
`டாவின்சி கோடு’ என்ற மதரீதியான சர்ச்சைக் கருத்துகளைக் கொண்ட படத்தை முற்றிலுமாக தமிழகத்தில் தடை செய்தவர் கலைஞர் கருணாநிதி, விஷமப் பிரசாரங்கள்கொண்ட படங்களுக்குக் கடிவாளம் போட்டவர் கலைஞர். `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தமிழக அரசுத் தரப்பிலிருந்தே தடை விதித்திருப்பார். அடுத்தடுத்து இது போன்றே வரத் திட்டமிடப்பட்டிருக்கும் படங்களை ரீலிஸ் ஆவதற்கு முன்பே தடுப்பதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கியிருப்பார் கலைஞர் கருணாநிதி.
கட்சித் தலைமை
கருணாநிதியின் தனிச்சிறப்பே முதலமைச்சராக இருந்தபோதும் திமுக கட்சித் தலைவராக, மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதுதான், கோட்டைக்குச் சென்று அதிகாரிகளைப் பார்ப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல அறிவாலயத்துக்குச் சென்று தொண்டர்களைச் சந்திப்பதையும் வழக்கப்படுத்திக் கொண்டவர்.
நவீனத்துவ தலைவர்
கலைஞர் கருணாநிதி காலத்துக்கேற்ப தன்னை உருமாற்றிக்கொள்ளும் ஆற்றல்கொண்ட ஒரு தலைவர். கலைஞர் மட்டும் இருந்திருந்தால் இந்தக் காலத்திலிருக்கும் நவீன உபகரணங்களை அனைத்தையும் இரு கை பார்த்திருப்பார், பேனா அவரது ஆயுதம் என்றாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் பேனாவைத் தீட்டியிருப்பார். இன்ஸ்டாகிராம் தொடங்கி ஏ.ஐ தொழில்நுட்பம் வரை தெரிந்து வைத்திருப்பார். தொண்டர்களிடம் இன்ஸ்டா லைவ், ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் உரைநிகழ்த்தியிருப்பார்.
ஆளுநர் விவகாரம்
1970-களில் ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா. ஆரம்பத்தில் மாநில சுயாட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டாலும் காலப்போக்கில் ஆளுநரும் கருணாநிதியும் இணக்கமாகிவிட்டனர். “காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி திமுக ஆட்சி செய்கிறது” என்று கருணாநிதியைப் பாராட்டினார் ஆளுநர் கே.கே.ஷா. மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் கலங்கும் விளைவித்துவரும் ஆளுநரைத் தன்போக்கிலேயே மாற்றும் வல்லமை பெற்றவராக இருந்திருப்பார் கலைஞர் கருணாநிதி.
`ஆல் இன் ஆல்’ கலைஞர் கருணாநிதி
எதிர்க்கட்சிகள் போகிற போக்கில் விமர்சித்துவிடும் அளவுக்கு இடமளிக்காத ஒரு தலைவர் கருணாநிதி. அதிகாரிகளைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அமைச்சர்களைத் தன் இசைவுக்கேற்பவும் சுதந்திரமாகவும் செயல்பட வைப்பது, தொலைநோக்குடன் செயல்படுத்துவது, பெண்கள், திருநங்கையர் நலன், கல்வி மேம்பாடு, சாதி பேதங்களை ஒழிப்பது, மத துவேஷங்களைத் தடுப்பது எனச் சமத்துவம்கொண்ட சமூகத்தைப் பேணிக் காப்பவராக இருந்திருப்பார் கருணாநிதி.
`இந்த’ சம்பவங்களில் கருணாநிதி இருந்து முடிவெடுத்திருந்தால் அவை எப்படி இருந்திருக்கும்… உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்..!