இலங்கைக்கு அதிக நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கு ஏற்ற வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய லசார்ட் நிறுவனத்துக்கு இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டுக்கு அதிக நன்மை ஏற்படக் கூடிய வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. வெளிநாடுகளில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் தரையிறங்குவதற்கான உரிமை இலங்கையிடமே இருப்பதால் இது போன்ற பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது ஏற்படுத்தக் கூடிய கூட்டாண்மைகள் குறித்த பல தெரிவுகள் உள்ளன. இவற்றில் மிகவும் நன்மையான முறைமையொன்று பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மறுசீரமைப்பது தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் திறைசேரியால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் எவரும் இல்லாத தனியான நிபுணர்கள் குழுவொன்று உள்ளது. இந்தக் குழு லசார்ட் நிறுவனத்துடன் இணைந்து எந்த முறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகிறது. எனவே அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்த முடிவுகளை குறித்த குழுவே எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், இதன்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில், வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம், ஜய கண்டேனர் டர்மினல்ஸ் லிமிடட் நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் கம்பனி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றின் செயலாற்றுகை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்துடன், குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருந்த 2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2 ஒழுங்குவிதிகளும், 1971ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான 13 ஒழுங்குவிதிகளும், 1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பனவும் இங்கு அங்கீகரிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரேமலால் ஜயசேகர, கௌரவ அசோக பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஜே.சி.அலவத்துவல, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ ஜகத்குமார சுமித்திராராச்சி மற்றும் கௌரவ மிலான் ஜயதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.