குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம், மோட்டா கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை நல்ல ஆடை, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரைத் தவறான வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, அன்று இரவு கோயிலுக்கு வெளியே அந்தப் பட்டியல் சமூக இளைஞர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலையில் அவரைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், அவருடைய நண்பர்கள் ஆறு பேருடன் அங்கு வந்திருக்கிறார். பட்டியலின இளைஞரைக் கண்டதும் ஆத்திரமடைந்த அவர்கள், `நல்ல ஆடை, கூலிங் கிளாஸேல்லாம் எப்படி நீ அணியலாம்’ என வாக்குவாதம் செய்து, அந்த இளைஞரை ஏழு பேரும் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பட்டியலின இளைஞரின் தாயார், அவர்களைத் தடுக்க முயன்றிருக்கின்றனர். அதனால் அந்தக் கும்பல் அவரையும் தாக்கியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் உள்ளூர் காவல்துறையினர், “நல்ல ஆடை அணிந்ததன் காரணமாக, ஒரு கும்பலால் தான் தாக்கப்பட்டதாக அந்த இளைஞர் எங்களிடம் புகாரளித்திருக்கிறார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் இளைஞரும், அவருடைய தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், ஒரு பெண்ணின் மானத்தை சீர்குலைத்தல், தாமாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கின்றனர்.