பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா.

எண்ணிலடங்கா இசை எனும் இன்பத் தேனை தன்னகத்தே கொண்டிருக்கும் தனிப்பெரும் இசைக்கடல் “இசைஞானி” இளையராஜா அவர்களின் 80வது பிறந்த தினம் இன்று…

* 1943ஆம் ஆண்டு ஜுன் 2 அன்று, தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம் என்ற சிறிய கிராமத்தில், டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

* சினிமாவிற்கு வருவதற்கு முன் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா.

* 1976ஆம் ஆண்டு தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் மூலம், “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து, இசையமைப்பாளராக தனது 33வது வயதில் அறிமுகமானார்.

* முதல் படமே வெள்ளிவிழா கண்டது. எம் ஜி ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் கலர் படங்களையே வென்ற பெருமை, இந்த கருப்பு வெள்ளை “அன்னக்கிளி”க்கு உண்டு என்றால், அதற்கு இளையராஜாவின் இசை மட்டுமே காரணம்.

* ஒரு பாடலை உருவாக்க வாரமோ அல்லது மாத கணக்கில் நேரமோ இளையராஜாவிற்கு தேவைப்பட்டதே இல்லை. “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரைமணி நேரம்தான்.

* இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த திரைப்படம்தான் “நூறாவது நாள்”.

* எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் இசைஞானி மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர்.

* “அமிர்தவர்ஷினி” என்ற, மழையை வரவழைப்பதற்கான தனித்துவமிக்க ராகத்தை, ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் “தூங்காத விழிகள் ரெண்டு” பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் தான் இசைஞானி.

* “ரீதி கௌலை” என்ற ராகத்தை பயன்படுத்தி முதன் முதலில் மெட்டமைத்த பெருமையும் இசைஞானிக்கு உண்டு. படம் : “கவிக்குயில”. பாடல் : “சின்னக் கண்ணன் அழைக்கிறான”;.

* பெரும்பாலும் சோகப் பாடல்களை மட்டுமே சுமந்து வரும் “சுபபந்துவராளி” ராகத்தை பயன்படுத்தி, வித்தியாசமான, ஒரு துள்ளலான பாடலைத் தந்தவர்தான் இசைஞானி. பாடல் : “கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன். படம் : “குருசிஷ்யன்”.

* இசைஞானி விசிலில் ட்யூன் அமைத்து, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை பாட வைத்து ஒலிப்பதிவு செய்த பாடல்தான் “காதலின் தீபம் ஒன்று” என்ற “தம்பிக்கு எந்த ஊரு” திரைப்படப்பாடல்.

* ஆசியாவிலேயே முதல் முறையாக “சிம்பொனி” இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. “சிம்பொனி” கம்போஸ் பண்ண குறைந்தது 6 மாதாமாவது ஆகும். வெறும் 13 நாளில் கம்போஸ் செய்து, மற்ற கம்போஸர்களை மிரளச் செய்தவர்தான் இசைஞானி இளையராஜா.

* “பருவமே புதிய பாடல் பாடு” என்ற “நெஞ்சத்தைக் கிள்ளாதே” படப் பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்தான் இசைஞானி இளையராஜா.

* இசைஞானி இளையராஜா இசை வித்தகர் மட்டுமல்ல அற்புதமான கவிஞரும் கூட, காலத்தை வென்ற பல காவியப் பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வந்திருக்கின்றன.

* “தேசிய விருதுகள்”, “பத்ம விருதுகள்”, “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்”, “கலைமாமணி விருது”, “ஃபிலிம்ஃபேர் விருதுகள்”, “கேரள மாநில திரைப்பட விருதுகள்”, “சங்கீத நாடக அகாடமி விருது”, “முனைவர் பட்டம்” என விருதுகளும், பட்டங்களும் இவர் கைவசம் வந்து பெருமை அடைந்தன.

* இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு இவருக்கு “ராஜ்ய சபா உறுப்பினர்” பதவியும் வழங்கி கௌரவித்தது.

* விண்ணவரும் வியக்கும் வண்ணம் நம் மண்ணின் இசையை ஓங்கி ஒலித்த இசைஞானியின் பிறந்த நாளான இன்று, அவரைப் பற்றிய ஒரு சில குறிப்புகளை பகிர்ந்து, இசையுடன் இசைந்து இன்னும் பல்லாண்டு வாழ இசைஞானியை வாழ்த்தி மகிழ்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.