புவனேஸ்வர்:
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் ஒடிசா அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் இரவு 7 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதியது. இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று பயங்கர சத்தத்துடன் மோதின. இதில் இரண்டு ரயில்களுமே நிலைக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 5 பெட்டிகள் அப்பளம் போல நசுங்கி ஒன்றின் மீது ஒன்று ஏறி நிற்கிறது. வனப்பகுதியில் விபத்து நடந்ததால் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. பின்னர் கோரமண்டல் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஸ்டேஷனுக்கு வராதது குறித்து அங்கிருந்த அதிகாரி புகார் அளித்தார். அப்போதுதான் இந்த விபத்து குறித்து தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ரயில் பெட்டிகள் நசுங்கி இருப்பதால் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரயில் பெட்டிகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பயங்கர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.