விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தவர்களின் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு அனுமதி வழங்கியுள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.
அரசு டாஸ்மாக் பாரில் இருவர் உயிரிழந்தது மற்றும் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று தமிழக முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த பணியிட மாற்றங்களுக்கு கள்ளச்சாராய விவகாரமே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களை மூடி சீல் வைக்க உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களை கலால் துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் சீல் வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு அனுமதியில்லாத டாஸ்மாக் பார்களை உடனடியாக சீல் வைக்க வருவாய் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் பல்லாவரம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஏழு டாஸ்மாக் பார்களை வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் விதிகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.