பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற மாணவர்கள் – தீர்வு காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வலியுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுதல் மற்றும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமுகமளிக்கும் பிரச்சினையும் காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த (31) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே குறித்த விடயத்தை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே 113 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாண கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆகக் குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.

9 ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், வலயக்கவ்வி பணிப்பாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வலயக்கல்விப் பணிப்பாளரின் தலைமையில் குழுக்களை அமைத்து இதற்கான தீர்வுகளைக் காண முற்படுமாறு யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.