பாரீஸ்,
பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை தக்க வைக்கும்உத்வேகத்துடன் மட்டையை சுழற்றும் ‘நம்பர் ஒன் சூறாவளி’ இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் கிளாரி லுவை (அமெரிக்கா) துவம்சம் செய்து 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார். இந்த சீசனில் அவரது 30-வது வெற்றி இதுவாகும். 22 வயதான ஸ்வியாடெக் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஸின்யுடன் மோதுகிறார்.
விம்பிள்டன் சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லின்டா நோஸ்கோவாவையும் (செக்குடியரசு), அமெரிக்காவின் கைலா டே 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சையும் விரட்டினர்.
இதே போல் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை அடைந்த 16 வயதான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா)) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் டைனே பாரியை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் இளம் வயதில் 3-வது சுற்றை எட்டியவர் என்ற சிறப்பை மிரா ஆன்ட்ரீவா பெற்றார்.