பெங்களூர்:
கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்ற அசத்தல் வாக்குறுதிக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக ஒப்புதல் அளித்தார். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கூறிய 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரவுள்ளன.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாஜகவை காங்கிரஸ் தூக்கியெறிந்தது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸின் இந்த அமோக வெற்றிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, அக்கட்சி அளித்த 5 முத்தான வாக்குறுதிகள் தான். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி, 200 யுனிட் வரை இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.1500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது.
இதனிடையே, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நிதி தேவைப்படும். எனவே, இதை செயல்படுத்த வாய்ப்பே இல்லை. மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பாஜக விமர்சித்து வந்தது.
இந்நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அந்த 5 வாக்குறுதிகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அந்த வாக்குறுதிகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரவுள்ளன.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “நாங்கள் அளித்த 5 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். குடும்பத் தலைவிகளை கணக்கெடுக்கும் பணி ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 ரொக்கம் மாதந்தோறும் அவர்களின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும். அதேபோல, மற்ற வாக்குறுதிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவேற்றப்படும்” என்றார்.