முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 நாள் பயணத்தில் 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஆயிரத்து 891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், வெளிநாட்டில் திரட்டிய முதலீட்டின் உண்மையான மதிப்பு எவ்வளவு? என இ.பி.எஸ். கேள்வியெழுப்பி உள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கொமாட்சு, ஓம்ரான் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வரும் நிலையில், அந்நிறுவன சி.இ.ஓ.க்களை இங்கேயே அழைத்து முதலீடுகளை சுலபமாக பெறாமல் வெளிநாடு வரையில் சென்றது தான் தோல்வி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கனவே தொழில் செய்து வரும் நிறுவனங்களை மற்ற மாநிலங்களுக்கு செல்ல விடாமல் தடுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.