சென்னை: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.132 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒடிஷா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார்.
இதனிடையே, ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ரயில் விபத்து தொடர்பாக தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்யும் என ஒடிஷா முதல்வரிடம் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிஷா செல்லவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அரியலூரில் இருக்கும் அமைச்சர் சிவசங்கர், சென்னை வரவுள்ளார். தொடர்ந்து நாளை காலை முதல் விமானத்தில் ஒடிஷாவுக்கு செல்லும் சிவசங்கர் உடன் 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லவிருக்கின்றனர்.
இதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ரயில் விபத்து தொடர்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.