சென்னை: வீரமாங்குடி அச்சு வெல்லம், மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, ஜவ்வாது மலை சாமை உள்ளிட்ட 15 விளைபொருட்களுக்கு இந்தாண்டு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சாகுபடி செலவைக் குறைத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயர, கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சில விளைபொருட்களின் உற்பத்தி குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே சார்ந்து இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் அப்பயிர் ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்ய முன்வருவார்கள். இதனால், உற்பத்தி அதிகரித்து, விற்பனை வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதைக் கருத்தில்கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டில் பண்ருட்டி பலா, பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சாத்தூர் சம்பா வத்தல், மதுரை சோழவந்தான் வெற்றிலை, பெரம்பலூர் செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, புளியங்குடி எலுமிச்சை, சேலம் கண்ணாடி கத்தரி, ராமநாதபுரம் சித்திரைக் கார் அரிசி, கவுந்தப்பாடி அச்சுவெல்லம் போன்ற 10 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது.
இதில் சோழவந்தான் வெற்றிலைக்கு மட்டும் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதர விளைபொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தாண்டில், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, திருப்பூர் மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்தரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, ஜவ்வாது மலை சாமை, கரூர் சேங்கல் துவரை, திண்டிவனம் பனிப்பயறு, விருதுநகர் அதலைக்காய், கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்தரி போன்ற 15 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது என்றார்.