சென்னை: வரும் 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையும் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார். அதன்பின் மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.
இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறி இருந்தார் . இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 7ம் தேதி பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த தேதி உறுதி செய்யப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி தொடங்கிய 2 நாட்களில், அதாவது 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது.
இந்த குழு கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும். புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்த குழு கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் கண்டிப்பாக வரும் 9ம் தேதி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.