Government action to rescue Indian child stuck in Germany for 20 months | ஜெர்மனியில் 20 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய குழந்தையை மீட்க அரசு நடவடிக்கை

புதுடில்லி,-ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் 20 மாதங்களாக சிக்கித் தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, அந்நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த பவேஷ், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஜெர்மனியின் குழந்தை நல அதிகாரிகள், குழந்தையை தங்கள் பராமரிப்பில் வைத்து உள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் எந்த குற்றச் சாட்டும் இல்லாமல் வழக்கு முடிக்கப்பட்டது.

தற்போது வழக்கு முடிந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், பல்வேறு காரணங்களைக் கூறி, குழந்தையை பெற்றோரிடம் தராமல் ஜெர்மன் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை பறிபோன நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்த பவேஷ் தம்பதி, சிறுமியை மீட்டுத் தர மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சிறுமியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறிஉள்ளதாவது:

குழந்தை ஜெர்மனியின் பராமரிப்பில் தொடர்ந்து தங்கியிருப்பது அவரது சமூக, கலாசார மற்றும் மொழியியல் உரிமைகளை மீறுவதாகும். இது அவரது பெற்றொருக்கும், இந்திய அரசுக்கு கவலை அளிக்கிறது. குழந்தை இந்திய நாட்டவர் என்பதால், அவரது வளர்ப்பு எங்கு இருக்க வேண்டும் என்பதை சமூக கலாசார பின்னணியே தீர்மானிக்கும்.

அவரை இந்தியாவிற்கு விரைவில் அனுப்ப தேவையான அனைத்தையும் செய்யுமாறு ஜெர்மன் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் பெர்லினில் உள்ள இந்திய துாதரகம் ஆகியவை தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.