சென்னை: ரசிகர்களின் இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்திய திரையுலகில் இளையராஜாவின் இசை செய்த மாயாஜாலங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
அவரது இசையில் வெளியான பாடல்களுக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் இளையராஜாவின் இசையில் ரசிகர்களை மயக்கிய டாப் 10 பாடல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
இளையராஜாவின் டாப் 10 சாங்ஸ்:இந்திய திரையிசையுலகில் தன்னிகரில்லா தனித்துவமான இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் ஒருவர். 1970, 80களில் இந்திப் பாடல்களில் சொக்கிக் கிடந்த தமிழ் ரசிகர்களை தனது இசையால் மீட்டெடுத்த மீட்பர் இளையராஜா. காலங்கலமாக வரையறுத்து வைக்கப்பட்டிருந்த காவிய இசைத்தன்மையில் இருந்து புதியதொடு இசைப் பாச்சலை நிகழ்த்தியது ராஜாவின் ஆர்மோனியம்.
ஆம்! மனதுக்கும் வாழ்வியலுக்கும் தொடர்பே இல்லாத இசைக்குப் பதிலாக, இந்த மண்ணின் மரபிசையை ரசிகர்களின் செவிகளுக்குள் கடத்தினார் இளையராஜா. தான் அறிமுகமான முதல் படமான அன்னக்கிளியில் அசல் கிராமிய இசையில் விருந்து படைத்த இளையராஜா, அதே வட்டத்திற்குள் மட்டும் தேங்கி விடாமல் தமிழ்நாட்டின் இசை பண்பாடாகவே வளர்ந்து நிற்பது தான் அவரின் மகத்தான சாதனை. அப்படி ராஜாவின் இசையில் அற்புதங்கள் நிகழ்த்திய டாப் 10 பாடல்கள் இதோ.
1. மச்சான பார்த்தீகளா: அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன. அதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள், பாடல் வரிகள் இலக்கிய நடையில் இல்லாமல், வட்டார வழக்கு மொழியாக அதன் இயல்பிலேயே இருந்தது. அதேபோல் இளையராஜாவின் இசையும் வயல்வெளிகளுக்குள் இறங்கி கும்மியாட்டம் ஆடின. அப்படியொரு அசலான பாடல் தான் ‘மச்சான பார்த்தீகளா.’ ரசிகர்கள் அதுவரை கேட்டிடாத ஜானகியின் குரல் இந்தப் பாடலின் உயிர்நாடியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
2. பாடறியேன் படிப்பறியேன்: பாடல் இளையராஜாவின் கேரியரில் மிகப்பெரிய உச்சம் எனலாம். அன்னக்கிளி, 16 வயதினிலே பட பாடல்கள் கிராமிய பின்னணியில் இருந்ததால், அதற்கு மேல் அவருக்கு இசைஞானம் கிடையாது என்ற விமர்சனம் இருந்தது. கர்நாடக இசையெல்லாம் இளையராஜாவுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிய விமர்சகர்களுக்கு, சிந்து பைரவி படம் மூலம் பதிலடி கொடுத்தார். சினிமாவுக்கு என தனித்துவமான கர்நாடக இசை வடிவம் உள்ளது என்பதை பறைசாற்றியது ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடல். சித்ராவுக்கும் இளையராஜாவுக்கும் தேசிய விருதை வென்றுக் கொடுத்த இப்பாடலை கர்நாடக இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட தங்களது தொடையில் தாளம் தட்டி ரசித்து மகிழ்ந்தனர்.
3. கண்ணே கலைமானே: பாடல் இளையராஜாவின் ரசிகர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம் என்பதே மறுக்க முடியாத உண்மை. தனிமை, வெறுமை, அதற்குள் கட்டுட்டுண்டு கிடக்கும் காதல், தவிப்பு, பரிதாபம், ஆறுதல், தாலாட்டு, காமத்திற்கு அப்பாற்பட்ட உயிர் மெய் தீண்டல் என மனிதர்களின் ஆன்மாவுக்கான பரிசுத்தமான பாடல் என இதனைக் கூறலாம். எளிமையான மெட்டும், மெல்லிய தாள வாத்தியங்களும், யேசுதாஸின் சன்னமான குரலும் காலம் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தாலும் ரசிகர்கள் வெறுக்க முடியாத ஒரு வெறுமையின் துயரம். கண்ணே கலைமானே பாடலின் முதல் சரணத்தை கண்ணதாசனும், இரண்டாவது சரணத்தை வாலியும் எழுதியுள்ளது இப்பாடலின் இன்னொரு சிறப்பு. காரணம் இதுவே கண்ணதாசனின் கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பொதுவாக என் மனசு தங்கம்: என்ற இந்தப் பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் மிக முக்கியமானது. ஹீரோக்களின் அறிமுகப் பாடல் என்பது தத்துவங்களை மட்டுமே சுமந்துவந்த காலத்தில், அதில் கொண்டாட்டத்தையும் சேர்த்துக்கொடுத்தார் இளையராஜா. முரட்டுக்காளை என்ற படத்தின் டைட்டிலுக்கு ஏற்பவும் ரஜினியின் ஸ்டைலுக்கும் என அட்டகாசமான விருந்தாக அமைந்தது. ஆரம்ப இசை, இடையிசை, கோரஸ் என சின்ன சின்ன இடங்களிலும் ரசிகர்களின் நாடி நரம்பை முறுக்கேற்றி காட்டினார் இளையராஜா.
5. முதல் மரியாதை: திரைப்படத்தில் செவாலியே சிவாஜிக்கு தனது இசையால் மரியாதை செய்திருந்தார் இளையராஜா. பூங்காற்று திரும்புமா என மலேசியா வாசுதேவன் பாடத் தொடங்கியதும் சிவாஜியை தனது இசைக்குள் கடத்திக் கொண்டு வந்து அவரை ஆட்டுவித்தார் இளையராஜா. இந்தப் பாடலின் பின்னணியிலும் இடையிசையின் போதும் ஒலிக்கும் வயலின் சிவாஜியின் ஆறாத் துயரம் போல பெருக்கெடுத்து ஓடும். அங்கே சிவாஜியை நினைத்து ரசிகர்களை கண்கலங்க வைத்தது ராஜாவின் இசை.
6. ஆலோலம் பாடி: பாடலை இளையரஜாவே இசையமைத்து பாடியிருப்பார். ஆவரம்பூ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் கைவிடப்பட்டவர்களின் துயரத்தை பேசும் இசைமொழியாகும். ராஜாவின் இசையில் அம்மன் பாடல்களும், அம்மாவைப் பற்றிய பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்துக்குரியவை. அதில் பெரும்பாலான பாடல்களை இளையராஜா தான் பாடியுள்ளார். ஆனால், இந்தப் பாடலில் ஆலோலம் பாடி எனத் தொடங்கும் அந்த நொடி முதல் இறுதிவரை ரசிகர்களின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளும் ஒரு ஜீவனை ஆழமாக விதைத்திருப்பார் இளையராஜா.
7. வெஸ்டர்ன் இசையிலும் ராஜா ராஜா தான்: என உறுதியாக சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டாக குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் ஒன்றே போதுமானது. தனது காதலிக்கு கடிதம் எழுதும் நாயகன், அதனை காதலியை வைத்தே எழுதுவது தான் இப்பாடலின் உச்சப்பட்ச கற்பனை. உரையாடலும் பாடலுமாக மாறி மாறி ரொம்பவே வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார் இளையராஜா. சிம்பொனி இசை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூட இப்பாடலை கேட்கும் போது அதனை ரசிப்பார்கள். வயலின் ஆர்க்கெஸ்ட்ரா, லைவ் ட்ரம்ஸ் என வெஸ்டர்ன் இசையில் புதிய பாய்ச்சல் நிகழ்த்தியது இப்பாடல்.
8. சுந்தரி கண்ணால் ஒரு சேதி: பாடல் இளையராஜாவுக்கு மட்டும் என்றில்லாமல் இசையுலகிலேயே ஒரு அற்புதம் எனலாம், இப்பாடலின் கம்போஸிங் மும்பையில் நடைபெற, ஸ்டுடியோவில் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வைக்க இடமில்லாமல் வெளியே வர சென்றதாம். 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் ஒரு ராணுவ பேரணியை நடத்திக் காட்டியிருப்பார் இசைஞானி. சாத்தியப்படாத மியூசிக்கல் நோட்ஸ் பல இப்பாடலில் அடுக்கடுக்காகவும் அடர்த்தியாகவும் பரவியிருப்பதே சுந்தரி கண்ணால் பாடலின் தனிச்சிறப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினி, மணிரத்னம், எஸ்பிபி, சித்ரா என அனைவருக்கும் இது லைஃப் டைம் செட்டில்மெண்ட் பாடல்.
9. அவதாரம்: படத்தில் வரும் ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இளையராஜாவின் தெய்வீகமான இசைக்கு எடுத்துக்காட்டு. ஒரு காதல் பாடலில் ஆன்மாவை தொடும் தெய்வீக இசையை நிரப்புவதெல்லாம் கற்பனைகளுக்குள் எட்டாத அதிசயம். அதனை இந்தப் பாடலில் ரொம்பவே எளிதாக செய்திருப்பார் இளையராஜா. “தான தன்னா” என முதல் கோரஸ் போர்ஷனிலேயே ரசிகர்களை தியான நிலைக்கு கூட்டிச் செல்லும் ராஜாவின் இசை, அதன்பிறகு அவரும் ஜானகியும் சேர்ந்து பாடும் போது அதன் உச்சத்தை தொட்டுவிடும்.
10. விடுதலை: படத்தில் இடம்பெற்ற ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடல், ராஜா இன்னும் தனது இசை பயணத்தில் இருந்து விடுதலை பெறவில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது. உலகமே நவீனத்தை தேடி அலைந்துகொண்டிருக்கும் போது இப்போதும் தனது செவ்வியல்தன்மை இசையை விட்டு விலகவில்லை இளையராஜா. அதேநேரம், ரசிகர்களையும் தனது இசையால் வருடிக் கொண்டே இருப்பதில் அவர் தாயுமானவர் என்பதே வழிநெடுக காட்டுமல்லி பாடலில் காணலாம். இளையராஜாவின் இசையில் சிறந்த 10 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களின் பின்னணி ‘டாப் 10’ என்ற சொல்லாடலுக்கு நியாயம் சேர்க்கும் என நம்பலாம்.