‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏஆர் ரஹ்மான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரமாண்டமாக நடைபெற்று வரும் இவ்விழாவில் நடிகர் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாரி செல்வராஜ் பற்றியும் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றியும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
விழா மேடையில் பேசிய அவர், “இது மாரி அரசியல் என்று உதயநிதி கூறினார். இது நம் அரசியல். எனக்கு சிறு வருத்தம், என் படத்தை அவர் பண்ணவில்லை. இருந்தாலும் இதுவும் என் படம் தான். தேவர் மகனில் வடிவேலுவைப் பார்த்து இந்தக் கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பாரா எனக் கேட்டார்கள். அதில் அற்புதமாக நடித்தார். எல்லோரும் கீர்த்தி சுரேஷ் அழகாக இருப்பதாகக் கூறினார்கள். இன்று அழகிற்கு அலங்காரம் செய்து கொள்கிறார்கள். அது மட்டும் போதாது அழகுடன் அறிவும் இருந்தால் அது கூடுதல் அழகாக இருக்கும். அது கீர்த்தி சுரேஷிடம் இருக்கிறது. நான் இந்த விழாவை என் தோளில் தாங்குகிறேன். சமூக நீதிக்கானப் பேச்சு தொடர்ந்து நிகழ வேண்டும்” என்று பேசியுள்ளார்.