நாக்பூர்: ‛‛ இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்.
வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும்.
இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்.
நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம். ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம்.
ஒன்றாக வாழ்வதற்கும்,நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும். நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும்.
இது தான் நமது தாய்நாடு. நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது.
இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது. நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம்.
இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம். ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்