போபால், மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிச் சடங்கின் போது சிதையில் கண் விழித்ததால், பேய் என நினைத்து, அவரது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஜாபதி.
இவர், சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடலில் எந்த அசைவும் இல்லை.
இதையடுத்து, அவர் இறந்து விட்டதாக கருதி, குடும்பத்தினரும், உறவினர்களும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். உடலை எரியூட்டுவதற்காக மயானத்துக்கு எடுத்து வந்தனர். சிதையில் உடல் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு நடந்தபோது, பிரஜாபதியின் உடலில் அசைவுகள் தெரிந்தன. அவர் கண் விழித்துப் பார்த்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பேய் என நினைத்து அலறியடித்து ஓடினர். ஒரு சிலர் மட்டும் சுதாரித்து, டாக்டரை வரவழைத்தனர்.
பிரஜாபதியை பரிசோதித்த டாக்டர், அவருக்கு இதய துடிப்பு இருப்பதாக கூறினார்.
உடனடியாக பிரஜாபதியை காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement