WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் தோற்றதால், இந்த முறையாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் இந்தியா உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கண்ணோட்டத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என தெரிகிறது சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்டர்களுக்கான ஆரஞ்சு கேப்பை சுப்மன் கில் வென்றிருந்தார். அவர் தற்போது இந்திய அணிக்கு ஓப்பனராக உள்ளார். அதே சமயம் முகமது ஷமி பர்பிள் கேப்பை வென்று, ஆஸ்திரேலியா பேட்டர்களையும் பதம்பார்க்க காத்திருக்கிறார். விராட் கோலியும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதே சமயம் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக விளையாடியிருந்தார்.
இத்தனை வீரர்கள் ஃபார்மில் இருந்தாலும், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளக்கூடிய மிரட்டலான பிளேயிங் லெவன் அமைவதே வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில், சிறந்த பிளேயிங் லெவனை அமைப்பதில் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட தேர்வுக்குழுவுக்கு சற்று தலைவலி அளிக்கக்கூடியது எனலாம்.
#TeamIndia’s preps going on in full swing ahead of the #WTC23 Final. pic.twitter.com/Uu03yfoHgu
— BCCI (@BCCI) June 2, 2023
விக்கெட் கீப்பர் யார்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில், இந்திய அணியின் டெஸ்ட் லெவனில் ரிஷப் பந்திற்கு பதிலாக கேஎஸ் பாரத் சேர்க்கப்பட்டார். அவர் கீப்பிங்கில் அணிக்கு சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு பேட்டராக, அவர் சோபிக்கவில்லை. இஷான் கிஷான், கேஎஸ் பரத்தை விட சிறந்த பேட்டர் எனலாம். ஆனால் கிஷனுக்கு டெஸ்ட் போட்டியில் அனுபவம் இல்லை, அவரை நேரடியாக பிளேயிங் லெவனில் சேர்ப்பது பெரிய ரிஸ்க் ஆகும். மேலும், ஓவலில் பந்தை பெரிதாக ஸ்விங் செய்ய வைக்கும் சூழ்நிலையில், கீப்பிங் திறனும் அவசியமாகிறது. இதில், கேஎஸ் பரத் இஷான் கிஷானை விட முன்னணியில் இருப்பார்.
மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார்?
இறுதிப்போட்டியில், பந்துவீச்சில் புதிய பந்தை வைத்து முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நிச்சயம் களமிறங்குவார்கள். இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்துக்கு ஜெய்தேவ் உனட்கட் மற்றும் உமேஷ் யாதவ் இடையே போட்டி இருக்கும். உமேஷ் வேகமாகவும், துல்லியமாகவும் இருப்பார். இடது கை பந்துவீச்சாளர் ஆப்ஷனுக்கு உனத்கட் தேவைப்படலாம். உமேஷ் உனத்கட்டை விட அனுபவம் வாய்ந்தவர். இருப்பினும், இந்த இடத்திற்கு கடுமையான போட்டி நிலவும் என்பது மட்டும் நிச்சயம்.
அஸ்வினா ஷர்துலா
இந்திய அணி, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவார்களா இல்லையா என்பது பதில் தேவைப்படும் மற்றொரு கேள்வியாகும். இடது கை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா, ஒரு குறிப்பிட்ட ஆப்ஷனாக இருப்பார். அதே நேரத்தில் இரண்டு ஆல்-ரவுண்டர்களான ஆர் அஷ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் இவர்களில் யார் லெவனில் இடம்பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். அஸ்வினுக்கு அனுபவம் அதிகம், ஆனால் தாக்கூர் ஒரு வேகப்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே யார் விளையாடுவார்கள் என தெரியவரும்.