வாஷிங்டன்,
அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது, எங்கிருந்து ஏவப்படுகிறது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது உள்ளிட்டவை ஆகும்.
இதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் அணு ஆயுதங்கள் குறித்த தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததோடு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையும் அமெரிக்கா வழங்கியது.
இதனால் ‘நியூ ஸ்டார்ட்’ ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் தாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.