புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்நிலையில், இதில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கொண்டு சென்ற பேருந்து ஒன்று நடு வழியில் வேனுடன் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விதி வலியது என்று சொல்வதன் பொருள் இதுதானோ எனவும் கேட்க தோன்றுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது. அந்த நேரம் பார்த்து, பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி அதுவும் தடம்புரண்டு விழுந்தது. இதில் மூன்று ரயில்களும் உருக்குலைந்துவிட, இரண்டு ரயில்களில் உள்ள பயணிகள் குத்துயிரும் கொலை உயிருமாக போராடிக் கொண்டிருந்தனர்.
பின்னர் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதுவரை 300 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்னர். 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்வலைகளையே ஓயாத நிலையில், மற்றொரு பயங்கர சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்த சுமார் 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பேருந்தில் ஏற்றப்பட்டனர். இந்த பேருந்து மெதினிபூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஏற்கனவே காயமடைந்த பலர் மேலும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வேறு பேருந்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பட்ட காலிலேயே படும் என்பது போல ஒரு பெரும் விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பித்தவர்கள், மீண்டும் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.