ஒடிசா: மேற்குவங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டதில் அடுத்தடுத்து வந்த மேலும் இரண்டு ரயில்கள் இதில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் தற்போது வரை சுமார் 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2004க்கு பின்னர் உலக அளவில் பதிவான மோசமான ரயில் விபத்தாக இது மாறியுள்ளது.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதன் பின்னர்தார் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறது.
இதனையடுத்து பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயில் இந்த தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதுதான் விபத்தை, கோர விபத்தாக மாற்றியதற்கான காரணமாகும். இந்த யஷ்வந்த்பூர் ரயிலின் பெட்டிகள் விபத்தில் சிக்கி மூன்றாவது தண்டவாளத்தில் விழுந்துள்ளது. ஏற்கெனவே கோர விபத்தில் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மூன்றாவது டிராகில் வந்த சரக்கு ரயில் இந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டியின் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.
ஆக மூன்று ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையத்தை குறித்த நேரத்தில் அடையாததால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஏராளமான மீட்புப்படையினர் மற்றும், விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட பொதுமக்களும் இதில் இறங்கினர்.
இந்நிலையில் தற்போது வரை சுமார் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. எனவே மீட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தகவல் கிடைத்தவுடன் மீட்பு படையினரும், விமானப்படையினரும் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் 20, 30, 70 என உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், நேரம் செல்ல செல்ல உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது. திரிணாமுல் எம்பி, பாஜக நிர்வாகிகள் என பல அரசியல் கட்சியினர் விபத்து நடந்த இடத்திற்கு இரவே சென்று பார்வையிட்டுள்ளனர். அதேபோல இன்று காலை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் மீட்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.
இந்த விபத்து சர்வதேச அளவில் கடந்த 200ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. 2004ம் ஆண்டு சுனாமியின்போது பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 1,700 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற மிக கோரமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.