ஐ. நா வெசாக் தின நிகழ்வில் பிரதமர் திணேஷ் குணவர்தன விசேட உரை…

வெசாக் தினத்திற்கான சர்வதேச பேரவையின் தலைவர், சர்வதேச பெளத்த பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தாய்லாந்தின் உச்ச சங்க சபையின் உறுப்பினர்,சங்கைக்குரிய பேராசிரியர் பிரா பிரம்ம பண்டிட் அவர்களே,

மகா சூலா-லாங்-கோர்ன்- பல்கலைக்கழகத்தின் முதல்வர் சங்கைக்குரிய பேராசிரியர் பிரா தாம்-வஜ்ர-பண்டிட் அவர்களே,

சியாம் நிகாயவின் அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய வரக்காகொட ஞான-ரத்ன மகாநாயக்க தேரர் அவர்களே,

மேலும் இலங்கையைச் சேர்ந்த சங்கைக்குரிய அனுநாயக்க தேரர்ளே,

சங்கைக்குரிய சங்க ராஜ தேரர்களே, மற்றும் சங்கைக்குரிய மகா சங்கத்தினர்களே,

ஐக்கிய நாடுகளின் துணைச் செயலாளர் நாயகம் அர்மிடா சல்சியா அலிஸ்ஜாபானா, மற்றும் ESCAP அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் மற்றும் ஏனைய ஐ.நா அதிகாரிகளே,

மதிப்பிற்குரிய அதிதிகளே, மேதகையீர்களே, நண்பர்களே,

வெசாக் பெளர்ணமி தினத்தின் முப்பெரும் புனித விழாவினைக் கொண்டாடும் வகையில், தாய்லாந்தில் ஐக்கிய நாடுகளின் வெசாக் தினத்தை ஏற்பாடு செய்ததற்காக, மகா சூலா-லாங்-கோர்ன் பல்கலைக்கழகத்திற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் கெளரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பௌத்த சகாப்தம் 2567 (பொது சகாப்தம் 2023) வெசாக் பௌர்ணமி போயா தினத்தில், இந்த ஆண்டு நாங்கள் ஒன்றுகூடி எமது இணைந்த பயணத்தின் முக்கிய மைற்கற்களை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்.

இந்த உரையை ஆற்ற என்னை இங்கு அழைத்தமைக்காக வெசாக் தினத்திற்கான சர்வதேச பேரவை, பௌத்த பல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம், ஆயுத்தாயாவில் உள்ள மஹா சூலா-லாங்-கோர்ன் பல்கலைக்கழகம் (MCU), பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் ESCAP நிலையத்திற்கும் ஐ.நா வெசாக் தின ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

உலகின் தலைசிறந்த மத போதகராக விளங்கும் இளவரசர் சித்தார்த்த கௌதமர் ஒரு வெசாக் தினத்திலேயே பிறந்தார். ஆடம்பரத்தின் மடியில் வளர்ந்தாலும், மனிதகுலத்தின் துயரத்தை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார், பல ஆண்டுகால மனிதப் போராட்டத்திற்குப் பின்னர், உதவியின்றி, வழிகாட்டுதலின்றி, தனது சொந்த முயற்சியாலும், ஞானத்தாலும், வலியை உண்மையாக உணர்ந்து, அனைத்து கறைகளையும் ஒழித்தார். வெசாக் பௌர்ணமி தினத்தன்று அவர் புத்தராக ஞானம் பெற்றார். அவர் “புத்தராக” பிறக்கவில்லை, ஆனால் அவர் “புத்தராக” ஆனார்.

புத்தர் நாற்பத்தைந்து ஆண்டுகளாக, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் போதித்து, உழைத்து, வெசாக் பௌர்ணமி நாளில் பரிநிர்வாணமடைந்தார். அவரது சீடர்களுக்கு அவர்களின் “ஒரே ஆசிரியராக” பௌத்த தத்துவத்தையும் ஒழுக்கத்தையும் விட்டுச் சென்றார். மிதவாத அல்லது நடுத்தர பாதையான மத்யம பத்திபஜ்ஜத, அனைத்து சூழலியலையும் கூட்டாகப் பாதுகாத்து சேவையாற்றும் மற்றவர்களின் சேவையில் ஈடுபடும் பரத்தம் பதிபஜ்ஜத ஆகியவற்றில் மனித செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அப்போதனைகள் வலியுறுத்துகின்றன.

இந்த ஆண்டு தாய்லாந்தில் நாம் ஒன்றுகூடியிருக்கும் நிலையில், ஐ நா வெசாக் தினத்தின் 20வது ஆண்டு நிறைவையும், 18வது விழாவினையும் கொண்டாடுகிறோம். இன்றைய உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் புத்தரைத் தங்கள் உயர்ந்த ஆசிரியராகக் கருதுவதால், அறிவொளி பெற்ற புத்த பெருமானின் போதனைகளை வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பௌத்தர்கள் ஒன்றுசேர்ந்திருப்பது எமது பயணத்தில் ஒரு முக்கியமான மைற்கல்.

இலங்கைத் தாயின் முன்மாதிரியான புதல்வரும், சர்வதேச இராஜதந்திரியுமான மறைந்த கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் மகா சங்கத்தினர் மற்றும் புத்தரைப் பின்பற்றுபவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்காக இன்று நாம் இந்த விழாவைக் கொண்டாடுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம். தாய்லாந்தின் மறைந்த மன்னர் மாண்புமிகு பூமி-போல் அதுல்-யாதேஜ் தொடர்ந்து வழங்கிய மகத்தான ஆசீர்வாதங்களையும் நாம் நினைவு கூர்வோம்.

புத்த சாசனத்தை நிறுவுவதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் புத்தரின் போதனைகளை நாங்கள் மீண்டும் மீண்டும் பரிமாறிக் கொண்டோம் என்ற வகையில், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானதாகும். இலங்கையில் சங்க ஒழுங்கு முறைக்கு புத்துயிர் அளித்தமைக்காக சியாம் தேசத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய உபாலி நாயக்க மகா தேரருக்கு இலங்கை எப்போதும் நன்றியுடன் உள்ளது.

தாய்லாந்தின் சங்கைக்குரிய உபாலி மகாநாயக்க தேரர் மற்றும் இலங்கையின் சங்கைக்குரிய சரணங்கர சங்கராஜ தேரர் ஆகியோரின் முயற்சியால் இந்த ஆண்டு இலங்கை 270 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, அவர்கள் இணைந்து இலங்கையின் சங்க ஒழுங்குக்கு புத்துயிர்ப்பளித்து, இலங்கையில் சியாம் நிகாயவை நிறுவினர்.

சங்கைக்குரிய சங்கராஜ மகா தேரரின் தொலைநோக்கு வழிகாட்டலும் ஆசீர்வாதமும் இல்லாவிட்டால், இந்த சிறப்புவாய்ந்த ஒன்றுகூடலும் இதுவரையான எமது பயணமும் சாத்தியமாகியிருக்காது. மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, இலங்கையின் பிரதமர் என்ற முறையில், தாய்லாந்தின் சங்கராஜ புனித சோம்டெட் பிரா ஆரிய-வங்ச-கதயானா அவர்களுக்கு சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வருடாந்த மாநாட்டின் வெற்றிக்கு முக்கியமாக தாய்லாந்து மன்னர் மஹா வஜிரா-லாங்-கோர்னின் தொலைநோக்கு ஆதரவே காரணம். மன்னர் அவர்கள் 1993 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பு, கண்டி, மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்ததை நாம் நினைவுகூர்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது இளவரசராக இருந்த அவர் கொழும்பில் உள்ள தீப-துப்தம-ஆராம விகாரைக்கு விஜயம் செய்தார். 1897 ஆம் ஆண்டு முதல் அவரது குடும்பத்தின் அரச மூதாதையர்கள் மிகுந்த சமய ஈடுபாட்டை கொண்டிருந்தனர்.

கண்டியில் இருந்தபோது, புத்த பெருமானின் மிகவும் புனிதமான தந்தம் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்செய்தார். இலங்கையின் பிரதமர் என்ற முறையில், மாண்புமிகு மன்னருக்கு, நீண்ட ஆயுளுக்கும், சிறந்த ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“உலகளாவிய நெருக்கடிகளை பௌத்த ஞானம் எவ்வாறு தீர்க்க முடியும்” என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அதன் மூலம் புதிய முன்னோக்கிய தீர்வுகளை கொண்டு வருவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நேர்மையான ஆர்வத்தில் ஐ நா வெசாக் தினம் ஒரு சிறந்த உதாரணத்தைக் காட்டியிருப்பதை இங்கு குறுப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பௌத்த போதனைகள் குறித்த அறிவொளி கலந்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம்.

“பேண்தகு அபிவிருத்தி”, “சமூக மாற்றம்”, “புவி வெப்பமயமாதல்”, “சூழல் பாதுகாப்பு”, “ஆரோக்கியமான வாழ்வு”, “அமைதியை கட்டியெழுப்புதல்”, “மோதலுக்குப் பிந்தைய மீட்பு” மற்றும் இது போன்ற பல கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

நிச்சயமாக, ‘சன்சார’வை விட பெரிய நெருக்கடி எதுவும் இல்லை, இது முடிவற்ற சுழற்சி. இதை, புத்த பெருமான் ” காரண காரியம் ” என்ற பயன்பாட்டின் மூலம் கவனமாக விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்து, அவற்றின் உண்மையான தன்மையை உணர்ந்துகொண்டார். “நடுத்தர பாதையே”, முன்னோக்கிச் செல்லும் ஒரே மிதமான நடைமுறை வழி என்றும், முடிவை அடையும் வரை, பாதையில் ஒருவரின் சுயத்துடன் “மன நிறைவோடு ஈடுபட வேண்டும்” என்றும் புரிந்துகொண்டார். பௌத்தர்களாகிய எங்களுக்கு, மற்ற எல்லா நெருக்கடிகளும், ஒரு புதிய மனநிலையுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு புதிய திறப்பு மட்டுமே. சூழலைப் பராமரிப்பதில், மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பராமரிப்பதில் ஆழ்ந்த சிந்தனையுடன் நடைமுறைகளை நிறுவுவதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபடுவது புத்தபெருமானால் நிறுவப்பட்டது.

“ஆரோக்கியமே மிகப் பெரிய செல்வம்” என்ற ஞான வார்த்தைகள் 2600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தரினால் உலகிற்கு கற்பிக்கப்பட்டது. “தனிமனிதர்களின் பொறுப்பான மேம்பாடு” மற்றும் “சமூகத்தின் நிலைத்தன்மை” ஆகியவற்றை நோக்கி, மிதமான பாதையில், அப்போது நிறுவப்பட்டிருந்த சமூகக் கட்டமைப்பை சவாலுக்குட்படுத்தி மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியைத் தொடங்கியவர் புத்தர் சித்தார்த்த கௌதமர் ஆவார்.

இன்று, உலகத்தின் அனைத்து மூலைகளிலும், வசதி படைத்தவர்கள் முதல் ஏழைகள் வரை அனைத்துத் தரப்புகளிலும், மில்லியன் கணக்கான மனித உயிர்களின் இழப்புக்கு காரணமான முன்னெப்போதுமில்லாத அளவிலான உலகளாவிய தொற்றுநோய்க்குப் பின்னர் நாம் சந்திக்கிறோம். பொருள் செல்வத்தின் மூலம் மட்டுமே உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்பதை இது உலகத்தாருக்கு உணரவைத்துள்ளதுடன், இதுபோன்ற அளவு நெருக்கடியை சமாளிப்பது மற்றவர்களின் கூட்டுச் சேவையின் மூலம் மட்டுமே முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளது.

தொற்றுநோய்க்குப் பின்னர் விரைவில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உலகெங்கிலும் உள்ள பொருளாதார நடவடிக்கைகளின் மிகப்பெரிய மந்தநிலைக்கு இது பங்களித்தது. அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைக் கொண்ட குடும்பங்கள் இதில் அடங்கும். இது உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரித்தது. அரசாங்கமோ, தனியார் துறையோ, எந்த நிறுவனமோ நியாயமான தீர்வைக் காண முடியவில்லை.

மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெளிவாக வெளிப்படுத்தியது போல், அதே காலகட்டத்தில், உலகளாவிய பொருட் போக்குவரத்து கப்பல்கள் 1000 சதவீதத்திற்கும் அதிகமான நியாயமற்ற இலாபத்தை ஈட்டுகின்றன. உலகெங்கிலும் உணவு, மருந்து மற்றும் முக்கிய ஏற்றுமதிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் மேலும் இடையூறு மற்றும் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. நிலைமையை சமன் செய்ய, ஜனாதிபதி பைடன் ஒரு வரி தீர்வில் தலையிட வேண்டியிருந்தது. இது விடயங்களை ஒரு நடுத்தர பாதைக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கும் துன்பப்படுபவர்களைப் பற்றிய கவலைகளைக் குறைக்கவும், நெறிமுறையற்ற மிகை ஆதாயங்களில் மிதமான ஈடுபாடு காட்டவும் வழிசெய்தது.

கடந்த 10 மாதங்களில் இலங்கை பல தசாப்தங்களாக நீடித்த அதீத பொருளாதார கொள்கைகளை கைவிட்டு, மையப் பாதையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது இலங்கை பெரும் தாங்குதிறனை வெளிப்படுத்தவும், மையப் பாதையில் தொடர்ந்து முன்னேற உலக நம்பிக்கையை மீண்டும் பெறவும் பெரிதும் உதவியுள்ளது.

கௌதம புத்தர், அங்குத்தர நிகாய அனன சூத்திரத்தில் கடன் பற்றி பேசினார். அனன என்ற வார்த்தையின் பொருள் கடன் இல்லாதிருத்தல் ஆகும். ஒரு தனிநபரோ அல்லது ஒரு தேசமோ கடனில்லாமல் வாழ்ந்தால், தனிநபரோ அல்லது நாடுகளோ நான்கு வகையான மகிழ்ச்சியை அடைய முடியும். அத்த சுகம், நீதியின் மூலம் செல்வத்தை உரிமையாக்கும் மகிழ்ச்சி, போக சுகம், சம்பாதித்த செல்வத்தை முறையாகப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி, அனன சுகம், கடனில்லா மகிழ்ச்சி, அனவஜ்ஜ சுகம், குற்றமற்ற வாழ்க்கை நடத்தும் மகிழ்ச்சி. அதுவே மகிழ்ச்சியான தேசத்தின் உச்சமாகும்.

எனவே, மனிதகுலத்தால் ஒருபோதும் கேள்விப்பட்டிராத முன்னெப்போதும் இல்லாத கோவிட் தொற்றுநோயின் விளைவாக நாடுகளின் மீது குவிக்கப்பட்ட அனைத்து கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்த இயலாத அளவிலான நிதி பொறுப்புகள் தொடர்பில் இந்த சிறப்புவாய்ந்த சபை ஒருமனதாக ஒரு உலகளாவிய கடன் தவணை உரிமைக்கு அல்லது அதுபோன்ற எந்தவொரு தீர்வுக்கும் அழைப்பு விடுக்கட்டும். இது அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கவலைகொண்ட உள்ளங்களுக்கு வழங்கக்கூடிய மிகவும் நெறிமுறைசார்ந்த நிவாரணமாகும்.

நவீன நெருக்கடியானது அதிகரித்து வரும் மக்கள்தொகையுடன் தொடங்குகிறது. இன்று, உலகில் 8 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்த அபரிமிதமான வளர்ச்சியானது, நீர், நிலம் மற்றும் உணவுப் பற்றாக்குறையைத் தொடர்ந்து போராடி, வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டமானது உலகளாவிய தொற்றுநோய்கள், இயற்கை பேரழிவுகள், நிதிச் சரிவுகள் மற்றும் அழிவுகரமான போர்களுக்கு மத்தியிலேயே இடம்பெறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடாக சீனா இருந்தது, மேலும் அவர்கள் “முழுமையான கிராமப்புற வறுமையில்” இருந்து “பல மில்லியன் மக்களை” மேம்படுத்துவதற்காக விசேடமான இலக்குமயப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு புதிய மனநிலையுடன் சிக்கல்களைச் சமாளிப்பதில் அவர்களின் வெற்றி மனிதகுல வரலாற்றில் ஒரு சிறந்த முன் உதாரணம் மற்றும் வறுமை ஒழிப்பில் முக்கியமான நடவடிக்கையுமாகும்.

இன்றைய உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்திற்கு சேவை செய்ய கிராமிய விவசாய உற்பத்தியை உணவு உற்பத்தியில் முதுகெலும்பாக அங்கீகரித்து இந்தியாவின் 80 மில்லியன் கிராமப்புற விவசாயிகளுக்கு பிரதமர் அலுவலகம் நேரடியாக பணம் செலுத்தி, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலத்திரனியல் முறையில் அனுப்பியது. இதுவும் ஒரு புதிய மனநிலையுடன் விடயங்களை கையாள்வதாகும்.

மிக அண்மையில் ஸ்பெய்ன் 100 சதவீத மின்சாரத் தேவையை, ஒரு கனமான வார நாளில், முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களான நீர், சூரிய சக்தி மற்றும் காற்றின் மூலம் தொடர்ந்து ஆற்ற முடிந்தது. இது சூழலையும், பொதுத் தேவையையும் கருத்தில் கொண்டு, நாளைய உலகம் முழுவதும் அத்தியாவசிய சக்திவள சூத்திரங்களில் என்ன வர வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டமையாகும். இதுவும் ஒரு புதிய மனநிலையுடன் விடயங்களை கையாள்வதாகும்.

அதேபோன்று, தாய்லாந்தின் தன்னிறைவான பொருளாதாரக் கொள்கை, புத்த மதத்திற்கும் பேண்தகு அபிவிருத்திக்கும் இடையே ஒரு தொடர்பை வழங்கும் ஒரு சிறந்த உதாரணமாகும். இது ஒரு தனித்துவமான நிலையான கட்டமைப்பாகும், இது பொது, தனியார் மற்றும் குடிமக்கள் அமைப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரம், சமூகம் மற்றும் சூழலுடனான உறவுகள் பற்றிய பௌத்த உலகின் பார்வையை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவான பொருளாதார தத்துவமாகும்.

எனவே, இந்த அடிப்படையில் மிகவும் அத்தியாவசியமான நெருக்கடியை எப்படி ஒரு புதிய மனநிலையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆசியா உலகிற்கு தெளிவாகக் காட்டுகிறது. “இந்த நூற்றாண்டு ஆசியாவிற்கு சொந்தமானது” என்று பல முறை, பல மன்றங்களில் கூறப்பட்டது. உலகத்தின் எதிர்காலத்திற்கான வரலாற்று ஞானமும் நடைமுறைகளும் முக்கியமாகக் கண்டறியப்பட வேண்டிய இடம் ஆசியா. மேலும் ஆசியான் அமைப்பு ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆசியான் என்பது உள்ளத்திற்கு பௌத்த ஞானத்திற்கும் உலகளாவிய உணவு உற்பத்தியில் பேண்தகு விவசாய நடைமுறைகளுக்குமான வாயிலாகும்.

தேரவாத பாரம்பரியம் உலகில் ஞானத்திற்கு அடுத்ததாக உலகில் மிகவும் பெறுமதியான பௌத்த பாரம்பரியமாகும். விபஸ்ஸனா தியானத்தின் மூலம் மனநிறைவு என்பது தேரவாத நாடுகளுக்கு சேவை செய்வதற்கும் உலகின் பல நெருக்கடிகளைக் குணப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய அம்சமாகும். இந்த முயற்சியில் இலங்கை, தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய தேரவாத நாடுகளிடையே ஒரு பரந்த ஒத்துழைப்பு அவசியமானதாகும். எமது நாடுகளிடையே மிகவும் சுதந்திரமான இயக்கத்தையும் தொடர்புகளையும் நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும்.

அடுத்த முக்கிய அம்சமாக விளங்குவது, உலகம் முழுவதிலும் உள்ள தம்ம பாடசாலைகள் ஆகும், அங்கு எதிர்காலம், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், உலக அளவில் “மனிதாபிமான” அம்சத்தை மையமாகக் கொண்ட முழுமையான கல்வியினாலும் நவீன நாகரிகம் பற்றிய தெளிவுடனும் போசிக்கப்படுகிறார்கள்.

இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல இலங்கை தயாராக உள்ளது என்பதை அரசாங்கத்தின் சார்பிலும், இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் இந்த மகாசபைக்கு தெரிவித்துக் கொள்வதோடு, 19வது ஐ.நா. வெசாக் தினத்தை 2024 இல் இலங்கையில் நடத்த உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன். இது இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பெரும் பலமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும்.

இறுதியாக, இது தகவல்களின் யுகம் என்பதை நினைவில் கொள்வோம் அல்லது தவறான தகவல்களின் யுகம் என்று கூட அழைக்கலாம். தகவல் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படலாம், மோசமானவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம். தவறான தகவல் முன்பை விட அதிக ஆபத்தை கொண்டு வரக்கூடியது. பௌத்த உலகம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் நான் ஒரு பிரபலமான பௌத்த அறிஞரான மறைந்த கலாநிதி ஆனந்த குருகே அவர்களின் ஒரு கூற்றை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

”..இருபத்தி ஆறு (26) நூற்றாண்டு கால பௌத்த வரலாற்றில், பௌத்தத்தின் பெயரிலோ அல்லது பௌத்த பாரம்பரியத்தின் எழுச்சியின் காரணத்தினாலோ பெரிய போர்களோ, படையெடுப்புகளோ, பலப்பிரயோகமோ அல்லது படைப் பிரயோகமோ இடம்பெறவில்லை.

… பாரம்பரியமாக பௌத்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அண்மைய மற்றும் தற்போதைய மோதல்கள் பௌத்தத்துடன் எந்த வகையிலும் தொடர்பு பட்டவையல்ல என்றாலும், சில சமயங்களில் அவை ஊடகங்களால் “தவறாக” பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

மாறாக, பௌத்த சமூகங்கள் தப்பெண்ணம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமற்ற உதவிக்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக திகழ்கின்றன. இது புத்த பெருமானின் கட்டளை மற்றும் நடைமுறையின் தாக்கமாகும்.”

பௌத்தர்கள் வரலாற்று ரீதியாகவும் உலகெங்கிலும் “அகிம்சையை” ஒரு முதன்மையான கொள்கையாக கடைப்பிடித்துள்ளனர் என்பதை எப்போதும் வலியுறுத்த நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக, இந்த மாநாட்டை ஒழுங்கமைப்பதிலும் வழிநடத்துவதிலும் பெரும் வெற்றியை அடைவதற்கான தொடர்ச்சியான அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக, ஐ. நா வெசாக் தினத்திற்கான சர்வதேச பேரவையின் தலைவர் சங்கைக்குரிய பேராசிரியர் பிரா பிரம்ம பண்டிட் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள் உண்டாவதாக!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.