புவனேஸ்வர்:
ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக நிருபர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள பஹனபஜார் பகுதியில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த சர்க்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றுக்கொன்று மோதியது.
இந்த விபத்தில் கவிழ்ந்துகிடந்த ரயில் பெட்டிகள் மீது மற்றொரு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் இதுவரை 290 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மம்தா கூறிய பலி எண்ணிக்கை:
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் இந்த ரயிலில் அதிகம் பயணித்ததால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை ஒடிசாவுக்கு வருகை தந்து மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி மாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மீட்புப் பணிகள் தொடர்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டலாம்” எனக் கூறினார்.
வெடித்த வாக்குவாதம்:
அப்போது குறுக்கிட்ட அஸ்வின் வைஷ்ணவ், “மீட்புப் பணிகள்தான் நிறைவடைந்து விட்டதே” என்றார். இதையடுத்து, மீட்புப் பணிகள் முடிந்த பிறகு பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு என அஸ்வினி வைஷ்ணவிடம் மம்தா கேட்டார். அதற்கு 238 பேர் உயிரிழந்ததாக அஸ்வினி கூறினார். அதற்கு மம்தா, “இது நேற்று வந்த எண்ணிக்கை. இன்று எவ்வளவு.. நேற்றைக்கே 238 பேர் உயிரிழந்துவிட்டனர்” எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவாச் அமல்படுத்தப்படவில்லை:
தொடர்ந்து பேசிய மம்தா, “ரயில்வே துறையை நாம் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும். இதற்குதான் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. ரயில்வே எனக்கு குழந்தையை போல. நான் ரயில்வே அமைச்சராக இருந்தவள் மட்டுமல்லாமல் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவளும் கூட. ரயில்வே அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். ரயில் விபத்துகளை தடுக்க பயன்படும் ‘கவாச்’ தொழில்நுட்பம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை” என்றார்.
அரசியல் செய்ய நேரம் இல்லை:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதற்கான நேரம் இது அல்ல. மீட்புப்பணிகள் முடிந்துள்ளன. மறுசீரமைப்பு விரைவாக நடைபெறுகிறது. எல்லாமே வெளிப்படையாகவே நடக்கிறது” என்றார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தலைவர்கள் இருவர் இவ்வாறு வாக்குவாதம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது.