புவனேஸ்வர்:
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆபத்து அங்கு நெருங்கி இருக்கிறது. மிகப்பெரிய கனமழையை தரும் மேகங்கள் ஒடிசாவுக்கு சென்று மையம் கொள்ளப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள பஹனபஜார் பகுதியில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த சர்க்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த விபத்தில் கவிழ்ந்துகிடந்த ரயில் பெட்டிகள் மீது மற்றொரு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் இதுவரை 290 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ரயில் பெட்டிகள் பயங்கரமாக நசுங்கி இருப்பதால் அதை வெட்டி வெட்டியே உள்ளே இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி என்பதால் அங்கு மீட்புப் பணி நடைபெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. இந்த சூழலில், மிகப்பெரிய கனமழையை தரக்கூடிய மேகங்கள் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதுவும் சரியாக, விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகே அவை மையம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனால் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை முதல் அங்கு பயங்கர கனமழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4 நாட்களுக்காவது அங்கு மழை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அங்கு மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியும் பாதிக்கப்படும். என்ன நடக்க போகிறதோ..?