ஒடிசா: மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயிலில் மொத்தம் 864 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கியது. மேலும், இரண்டு ரயில்கள் இதில் மோதியதில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் தமிழர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
12841 எனும் எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலம் பல்சோர் அருகே, பஹானாகா எனும் கிராமத்தில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த பகுதி வனப்பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து உடனடியாக வெளியில் யாருக்கும் தெரிய வரவில்லை.
ஆனால் இந்த ரயில் சென்று சேர வேண்டிய பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை. இது அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்தும் ஏன் இன்னும் பத்ராக் ஸ்டேஷனுக்கு வந்து சேரவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தனர். இப்படி இருக்கையில், எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் குறித்த நேரத்தில் ரயில் நிலையத்தை அடையவில்லை.
மற்றொரு சரக்கு ரயிலுக்கும் இதே பிரச்னைதான். எனவே சிக்னல் பிரச்னையா? என அதிகாரிகள் ரயில்வே ஊழியர்களை தொடர்பு கொண்ட நிலையில்தான் இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இவர்களுக்கு உதவியாக விமானப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில் 20, 30, 70 என உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், நேரம் செல்ல செல்ல உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது.
அதேபோல இரவு நேரம் என்பதாலும், விபத்திற்கு உள்ளானது இரும்பு, எஃகினால் செய்யப்பட்ட ரயில் என்பதாலும், மீட்பு பணியில் கூடுதல் வேகம் தேவைப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை சுமார் 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு திரிணாமுல் எம்பி, பாஜக நிர்வாகிகள் என பல அரசியல் கட்சியினர் இரவே சென்று பார்வையிட்டுள்ளனர். அதேபோல இன்று காலை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பார்வையிட்டுள்ளார். இந்த விபத்து சர்வதேச அளவில் கடந்த 200ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது.
விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வருவதற்காக சுமார் 864 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் உயிரிழந்தவர்களில் சுமார் 35 பேர் தமிழர்கள் என்பது மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.