சென்னை: ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று ஒடிசா செல்லும் முன்பு அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, இந்தக் குழுவினர் இன்று விமானம் மூலம் ஒடிசா புறப்பட்டு சென்றனர். ஒடிசா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட உள்ளோம். விபத்தில் காயம் அடைந்த தமிழர்களை மீட்டு இங்கு கூட்டி வருவதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம். விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இங்கு இருக்கின்றன.” என்று கூறினார்.