ஒடிசா ரயில் விபத்து: தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்: பணிகளை முடுக்கிவிட்ட ஸ்டாலின்

முதல்வர்

இன்று (3.6.2023) சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டினர் பற்றிய விவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் இரயில்வே உயர் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள பயணிகள் விசாரணை மற்றும் உதவி மையத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று, உதவி மையத்தில் விபத்து குறித்து பெறப்பட்ட அழைப்புகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், இரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரும், காவல்துறை உயர் அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை சேகரித்து, தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஒடிசா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உதவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைபேசி வாயிலாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மூன்றும் ஒடிசா மாநிலத்தில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வந்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, ஆங்காங்கு இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நம் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையையும் அளித்துள்ள இந்த பயங்கரமான விபத்து, நாட்டையும் – நாட்டு மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் நான் உடனடியாக நேற்று இரவு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். இது குறித்து என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் அவரிடம் தெரிவித்துக்கொண்டு, அங்கு மீட்பு பணியில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசு சார்பில் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தேன்.

மேலும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், விபத்து நடந்த பாலசோர் பகுதியிலேயே அடுத்த நான்கு அல்லது ஐந்து தினங்கள் தங்கி இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், இந்திய காவல் பணி அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோரும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அங்குள்ள காவல்துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் சந்தீப் மிட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே விபத்து குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் அளிக்க மாநில அரசின் கட்டுப்பாட்டு அறைகள் நேற்று இரவு முதல் துவங்கி அது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நான் தற்போது தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வந்து சேர முடியாதவர்களையும், பல இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விபத்து நடந்த இடத்திலிருந்து சென்னைக்கு திரும்ப இயலாதவர்களையும் அழைத்து வருவதற்கு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கும் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. விபத்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு

மாநில கட்டுப்பாட்டு செல்போன் எண். 94458 69843 தொலைபேசி எண். 1070 வாட்ஸ்அப் எண். 94458 69848 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஒடிசா மாநில நிர்வாகத்துடன் நமது அதிகாரிகள் தொடர்பில் இருந்து தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இங்குள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காணொலி வாயிலாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் மேற்கொண்டுள்ள மருத்துவ மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கேட்டறிந்தோம்.

மீட்பு பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை தொடர்பு கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று நமக்கு அளிக்கும் விபரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இந்த சூழ்நிலையில், இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்திவிட்டு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலியை நாங்கள் அனுசரித்தோம்.

இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி அவர்களின் நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று இரயில்வே துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறோம். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறோம். அதுகுறித்த கணக்கெடுப்பு எல்லாம் முறையாக வந்ததற்கு பிறகு அது முறையாக வழங்கப்படும்” என்றார்.

கேள்வி – இரயிலில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விவரம் தெரிந்ததா?

முதல்வர் ஸ்டாலின் பதில் – அது குறித்து முறையான தகவல் இல்லை. அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். வந்ததற்கு பிறகு நான் சொல்கிறேன்.

கேள்வி – மீட்கப்பட்ட தமிழர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா. அதுகுறித்த விவரங்கள் எதுவும் இருக்கிறதா?

முதல்வர் ஸ்டாலின் பதில் – அந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விபத்து இரவில் நடந்தது. மீட்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தான் இந்த செய்தியை சொன்னார். முழுமையான தகவல் கிடைக்க குறைந்தது 4 – 5 மணிநேரங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.

கேள்வி – ஒடிசா மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டாரா?

முதல்வர் ஸ்டாலின் பதில் – நான் தான் கேட்டேன். இப்பொழுது தேவையில்லை. தேவைப்பட்டால் கேட்பதாக தெரிவித்தார்.

கேள்வி – விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து….

முதல்வர் ஸ்டாலின் பதில் – ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம். அந்த அளவிற்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் சொல்கிறேன் என்றார். இருந்தாலும் நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறோம். இங்கிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் போயிருக்கிறார்கள். அவர்கள் அங்கு சென்று சூழ்நிலையை அறிந்த பிறகு தகவல் சொல்வார்கள். அதன்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.