மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு சென்று கொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றொரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே விபத்துக்கு உள்ளானது.
ஒடிசாவில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 900க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநில அரசு, ஒன்றிய அரசு, பிற மாநில அரசுகள் விரைவாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒடிசா பாலசோர் மருத்துவமனையில் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். “விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசின் அனைத்து அமைப்புகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார்.