டெல்லி: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து அனைவரையும் அதிர வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ரயில் விபத்து வெள்ளிக்கிழமை அரங்கேறியது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன.
இதற்கு உலகெங்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை குறைந்தது 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது. தொடக்கம் முதலே ஒடிசா மாநில அரசு மீட்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் சேர்த்து மாநில தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தனர்.
இதற்கிடையே காயமடைந்தோர் குறித்து ஒடிசா மாநில சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ரயில் விபத்தைத் தொடர்ந்து மொத்தம் 1,175 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 793 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 382 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்றவர்களின் உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது: வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய கோரமண்டல் ரயில் தான் விபத்தில் சிக்கியுள்ளது. அன்றைய தினம் அந்த ரயில் வழக்கம் போல 3.20க்கு கொல்கத்தாவில் இருந்து கிளம்பியுள்ளது. இந்த ரயில் பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து நடந்துள்ளது. இதுவரை விபத்திற்கான காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இருப்பினும், கோரமண்டல் ரயில் முதலில் சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டதாகச் சொல்லப்படுகிறது. தடம் புரண்ட பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அங்கே வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் அதில் மோதியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து விசாரணை உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.