புவனேஸ்வர்,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.
அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு பணிகள் குறித்த நிலவரங்களை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா வெளியிட்டுள்ள தகவலின்படி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.