ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கோர விபத்தில் 1,200 பயணிகள் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்திருந்த ‘கவாச்’ எனப்படும் சிஸ்ட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.
என்ன நடந்தது?
நேற்றிரவு ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், சரியாக 7 மணி அளவில் பெங்களூரு-ஹவுரா ரயில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புறண்டுள்ளது.
இதனால் அந்த ரயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது, அந்த தண்டவாளத்தில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டு அதற்கு அருகில் இருந்த தண்டவாளம் மீது விழுந்துள்ளன.
அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி தடம் புறண்டுள்ளது. இவ்வாறு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குளாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவாச்
மத்திய அரசு கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ‘கவாச்’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. அதாவது, ஒரே வழித்தடத்தில் இரு ரயில்கள் வந்துகொண்டிருந்தால் குறிப்பிட்ட தூரத்திற்குள் ரரயில் எஞ்சின் முடங்கி தானாகவே நிறுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். இதற்கு SIL-4 சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த பாதுகாப்பு அமைப்பால் 10,000 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே தப்பு நடக்க சாத்தியம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்ய கடந்தாண்டு திட்டமிடப்பட்டது. அப்போது, செகந்திராபாத் கோட்டத்தின் லிங்கம்பள்ளி – விகாராபாத் இடையே ஒரே வழி தடத்தில் இரு ரயில்களை ஓட விட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு ரயிலில் அமைச்சர் பயணித்தார். இந்நிலையில், அதே பாதையில் மற்றொரு ரயில் வருவது அறிந்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணித்த ரயில் தானியங்கி முறையில் நின்றது. அது தொடர்பான வீடியோவையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஆனால், ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்க காவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைக்கப்படவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.