கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் என்பதால் இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் அதிகளில் இருக்க வாய்ப்பு உள்ளது.
முன்பதிவு பெட்டியில் பயணித்தோர், முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்தோர் என மொத்தம் எத்தனை தமிழர்கள் ரயிலில் பயணித்தனர். அவர்களின் நிலை குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
853 பேர் தமிழ்நாட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரம் தெரியவரவில்லை.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் மாநில அரசு கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் காலை 8.15 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளார்.
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை செண்ட்ரல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள், சிறப்பு மருத்துவக் குழு ஒடிசாவுக்கு இன்று காலை 9 மணியளிவில் விமானம் மூலம் செல்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 233ஆக அதிகரித்துள்ளது. 1998க்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். பஞ்சாபில் அப்போது ஏற்பட்ட விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.