கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆசிரியர் ஒருவர் மூலம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் குமார் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து சந்தோஷ் குமார், தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஆசிரியையிடம் கூறியுள்ளார். மேலும் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசிரியையிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆசிரியையை வடவள்ளியில் உள்ள வீட்டிற்கு வர சொன்ன சந்தோஷ் குமார், மனைவியை விவாகரத்து செய்து விட்டேன், உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, ஆசிரியையை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தொழில் தேவைக்காக ஆசிரியையிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வாங்கிய சந்தோஷ்குமார், ஆசிரியையை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சந்தோஷ் குமாரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆசிரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் குமார் மீது கொலை மிரட்டல், பலாத்காரம் செய்தல், மோசடி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.