தேனாண்டாள் முரளி தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒன்றிணைந்துவிட்டதாகச் செய்திகள் அலையடிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முரளி ராமநாராயணன் தலைமையில் ஓர் அணியும், தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டன. அதில் முரளி தலைமையிலான அணி வெற்றியும் பெற்றது. இந்த சங்கத்துடன் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து விட்டதாகச் செய்திகள் பரவின. இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவாவிடம் கேட்டேன்.
”அது முற்றிலும் தவறான செய்தி. ஆனால், இரண்டு சங்கத்தினரும் ஒற்றுமையோடு உள்ளோம். எல்லா விஷயத்திலும் அவங்களோடு இணைந்து செயல்படுவோம். பரஸ்பர நல்லுணர்வோடு இருப்போம். ஏன்னா, ரெண்டு சங்கங்களுமே தயாரிப்பாளர்களின் நலனுக்கான சங்கங்கள்தான். அதனால், நாங்கள் ஒன்றாகவே பாடுபடுவோம். ஒருமித்த கருத்தோடு செயல்படுவோம். ஏனென்றால், இரண்டு சங்கங்களின் நோக்கம் ஒன்றுதான். ஆனால், செயல்முறை வேறு வேறு. அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது பெரிய அமைப்பு. 1200 உறுப்பினர்களை கொண்டது. அதனால அங்கே பெரிய பொறுப்புகள் இருக்கும். உதவித்திட்டங்கள், பொறுப்புகள்னு நிறைய விஷயங்கள் இருக்கும்.
ஆனால், எங்க சங்கம் சின்ன அமைப்புதான். மொத்தமே 200 பேர்கள்தான். நாங்கள் சங்கம் ஆரம்பித்து 3 வருடங்கள்தான் ஆகின்றன. முரளி சார் தலைமையிலான சங்கம் அமையறதுக்கு முனனாடி முறையான சங்கம் இல்லை. தேர்தலும் நடக்காமல் இருந்தது. நீதிமன்ற மேற்பார்வையில் நடந்து வந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. நாங்கள் விரும்பிய மாதிரியே ஒரு சங்கம் வந்திருக்கிறது. எங்கள் சங்கத்தில் எங்களுக்குள் சின்னச் சின்ன அத்தியாவசிய தேவைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அந்த சங்கத்தில் அப்படி பண்ணிட முடியாதே!
அதனால், அந்த சங்கத்தோடு எல்லா விஷயத்திலும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என முடிவெடுத்தோம். தவிர, அரசை அணுகும் போது ஒரே குரலில் அணுகினால் தான் நன்மைகள் நடக்கும். ” என்கிறார் டி.சிவா.