கடந்த 1923-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரபல ‘டைம்’ இதழ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த இதழ் உலகின் வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் செய்தியாகப் பதிவு செய்திருக்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வையும் ‘டைம்’ இதழ் செய்தியாக பதிவு செய்திருக்கிறது.
‘இந்தியா: அழகிய அதிகாலை பொழுது’ என்ற தலைப்பில் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி ‘டைம்’ இதழ் வெளியிட்ட செய்தியின் சுருக்கம் வருமாறு:
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளில் இந்தியர்கள் அவரவர் கடவுள்களுக்கு மனதின் ஆழத்தில் இருந்து நன்றி செலுத்தினர். சிறப்பு பிரார்த்தனைகள், கவிதைகள், பாடல்களை பாடி மகிழ்ந்தனர். கவிக்குயில் சரோஜினி நாயுடு தனது வானொலி உரையில், “அழகிய அதிகாலைப் பொழுதில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்…” என்று கவிதையில் வர்ணித்தார்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து கருத்து எதுவும் இல்லாத நேருவே (agnostic), இந்தியாவின் முதல் பிரதமராவதற்கு முந்தைய நாளில் ஆன்மிக உணர்வில் ஆழ்ந்தார்.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரில் இருந்து ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சார்பில் இரு துறவிகள் டெல்லி வந்திருந்தனர். இந்தியாவில் பழங்கால மன்னர்கள் பதவியேற்கும்போது இந்து துறவிகள் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது வழக்கம். இதேபோல நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்க இருக்கும் நேருவுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஸ்ரீ அம்பலவாண தேசிகரின் விருப்பம்.
தமிழகத்தில் இருந்து டெல்லி வந்த இரு துறவிகளும் ஜடா முடி, மார்பு, நெற்றியில் திருநீறுடன் தெய்வீகமாக காட்சியளித்தனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி மாலையில் இரு துறவிகளும் நாகஸ்வரம் இசை, மேள தாளங்கள் முழங்க நேருவின் இல்லம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். முன்னால் சென்ற நாகஸ்வர கலைஞர்கள் ஒவ்வொரு 300 அடி தொலைவைக் கடந்ததும் ஓரிடத்தில் நின்று 15 நிமிடங்கள் வரை இசை மழையைப் பொழிந்தனர். ஊர்வலத்தில் சென்ற ஒருவர், பெரிய வெள்ளி தட்டை கையில் ஏந்தியிருந்தார். அதில் பீதாம்பரம் இருந்தது. இது விலைஉயர்ந்த பட்டு நூலால் நெய்யப்பட்ட சால்வை ஆகும்.
ஊர்வலமாக சென்ற துறவிகள், நேருவின் இல்லத்தை அடைந்ததும் நாகஸ்வர கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமாக இன்னிசை மழை பொழிந்தனர். நேருவின் அழைப்புக்காக துறவிகள் பொறுமையாக காத்திருந்தனர். சிறிது நேரத்தில் இரு துறவிகளும் மிகுந்த மரியாதையுடன் நேருவின் இல்லத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு துறவியின் கையில் செங்கோல் இருந்தது. அது 5 அடி நீளமும் 2 அங்குல தடிமனும் கொண்டதாக இருந்தது. அந்த துறவி தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த புனித நீரை நேருவின் மீது தெளித்து ஆசீர்வதித்தார். அவரது நெற்றியில் பூஜிக்கப்பட்ட திருநீறைப் பூசினார்.
பின்னர் நேருவுக்கு பீதாம்பரத்தை போர்த்தி, அவரது கையில் செங்கோலை வழங்கினார். அதோடு நடராஜர் கோயிலில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தையும் நேருவிடம் வழங்கினார். இதன்பிறகு நேருவும் மூத்த தலைவர்களும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு வாழை மரங்களால் தோரணம் கட்டப்பட்டு ஹோமம் வளர்த்து பூஜை வழிபாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. பிராமணர் ஒருவர் வேத மந்திரங்களை ஓதி பூஜையை நடத்தி கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றி ஏராளமான பெண்கள் வேத மந்திரங்களை பக்தியுடன் உச்சரித்தனர். புதிய அமைச்சர்களாக பதவியேற்க இருந்த மூத்த தலைவர்களின் மீது அர்ச்சகர் புனிதநீரை தெளித்து ஆசீர்வதித்தார். வயதில் மூத்த பெண் ஒருவர், அனைவரின் நெற்றியிலும் குங்குமத்தை பூசினார்.
அன்றிரவு 11 மணிக்கு அரசமைப்பு சட்ட அரங்கில் நேருவும் மூத்த தலைவர்களும் கூடினர். அப்போது ‘விதியுடன் ஓர் ஒப்பந்தம்’ என்ற புகழ்பெற்ற உரையை நேரு ஆற்றினார். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலையில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றுக் கொண்டார். விழாவில் நேருவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த கடைசி வைஸ்ராய் மவுன்ட் பேட்டனுக்கும் புகழாரம் சூட்டப்பட்டது. அரசமைப்பு சட்ட அரங்கம் மற்றும் அரங்கத்துக்கு வெளியே ‘மவுன்ட்பேட்டன் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.