புவனேஸ்வரம்: யஸ்வந்த்பூர் ரயிலில் ஏறிவிட்டேன் என அவர் கடைசியாக என்னிடம் பேசினார் என விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். கவலை தோய்ந்த முகத்துடன் அவர் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்து நடக்க காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸும் யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் அதி வேகத்தில் வந்ததே இத்தனை உயிரிழப்பு ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து யாராவது பொம்மைகளை தூக்கி எறிந்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது விபத்து நடந்த இடம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தண்டவாளத்தில் ஆங்காங்கே உடல் பாகங்களும் ரத்தக் கறைகளும் சிதைந்த உடல்களும் இருந்தன.
தடம்புரண்ட பெட்டிகளை பெரிய கிரேன் மூலம் அகற்றும் பணிகள் நடக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில் அதி வேகமான வேகத்தில் ரயில்கள் இயங்கியதே இந்த விபத்துக்கு காரணம். ஒரு பெரிய சப்தம் கேட்டத. அதன் பின்னர் நான் மேல் பெர்த்தில் இருந்து தரையில் விழுந்தேன்.
நிறைய பேர் காயங்களுன் கீழே விழுந்திருந்தனர் என்றார். அதுபோல் பெங்களூரில் பணியாற்றும் தச்சர் ஒருவர் கூறுகையில் எனக்கு மார்பு, பாதம், தலையில் அடிபட்டுள்ளது. நாங்கள் ஜன்னல் கதவுகளை திறக்க முயற்சித்தோம். ஆனாலும் கதவுகளை திறக்க முடியவில்லை. முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மென்ட்களில் நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர்.
இந்த ஜெனரல் பெட்டிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டன என்றார். அது போல் 30 வயது மதிப்பிலான ஒருவர் தனது மனைவிக்கு போன் செய்து தான் ஹவுரா மாவட்டத்தில் ஷாலிமர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிவிட்டேன் என்றார். அதுதான் அவர் கடைசியாக பேசியது என அவரது மனைவி தெரிவித்தார். இன்னும் சிலர் இந்த விபத்து நடந்ததும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கண் விழித்ததும்தான் இத்தனை பெரிய கோர விபத்து நடந்ததும் தெரியவந்ததாக தெரிவித்தனர்.