புவனேஸ்வர்:
ஒடிசாவில் நேரிட்ட கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
தற்போது வரை 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரடியாகவே விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது விபத்தில் நிலைக்குலைந்த ரயில் பெட்டிகளையும், அங்கு சிதறிக்கிடந்த மனிதர்களின் உடல் பாகங்கள், ரத்தத்தைக் கண்டு அவர் மிகுந்த சோகம் அடைந்தார். அவரது கண்களிலும் கண்ணீர் கசிந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
http://ser.indianrailways.gov.in
என்ற இணையதளத்துக்குள் சென்று Photographs of deceased passengers என்ற சுட்டியை அழுத்தினால் அந்த புகைப்படங்கள் வருகின்றன. அவர்களின் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் யாவும் அவர்கள் இறந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் அதை பார்க்கும் போது அந்த விபத்தின் பயங்கரம் கண் முன்னே விரிகிறது.