மலினமான அரசியலுக்கு விளம்பரம் தேடித் தரப்போவதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாலும் நிதியமைச்சர் என்ற முக்கிய பொறுப்பை பிடிஆரிடமிருந்து பறித்து அண்ணாமலைக்கு விளம்பரம் தேடித் தந்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இலாக்கா மாற்றம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்துள்ளது. இதனால் பெரிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
பிடிஆருக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லையா?புதிய துறையில் திறம்பட செயலாற்றுவேன் என்று பிடிஆர் கூறியிருந்தாலும் இலாக்கா மாற்றம் அவரை ரொம்பவே பாதித்துள்ளதாம். மேலும் அவருக்கு புதிய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்க திட்டமிட்டதாக ஒரு தகவல் அரசியல் அரங்கில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவி வருகிறது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?இதுகுறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பிடிஆர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்திருப்பது உண்மைதான் என்கிறார்கள். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல நினைக்கவில்லையாம். அவ்வாறு செய்தால் இவ்வளவு நாள் மக்களுக்காக தான் பேசிய அரசியலுக்கு பொருள் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறாராம்.
வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானது!மதுரைக் காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நேற்று முன் தினம் கலந்து கொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாணவர்கள் மத்தியில் பேசும் போது, “வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் தற்காலிகமானது. உலகத்தில் யாருமே என்றைக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு விடா முயற்சியும் துணிச்சலும் தேவை” என்று கூறியிருந்தார்.
அமெரிக்கா செல்வது உறுதியா?
அவர் கூறியபடி ஏற்ற, இறக்கங்களை பக்குவமாக கையாளும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பதவியிலிருந்து விலகாமல் ஓரிரு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கிருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் முதலமைச்சர் மூலம் இந்திய வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என அடித்துச் சொல்கிறார்கள்.